“இந்து சமயத்துக்கு எதிராகச் செயல்படும்‌ இந்து சமய அறநிலையத்துறை!" – திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்

தமிழ்நாடு மாநில பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, இந்து சமயத்துக்கு எதிராக இந்து சமய அறநிலையத்துறை செயல்படுவதாக தி.மு.க அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், “கன்னியாகுமரி மாவட்டம்‌, மண்டைக்காடு பகவதி அம்மன்‌ கோயிலில்‌, ஆண்டுதோறும்‌ மாசிக்‌ கொடை விழா விமர்சையாகக்‌ கொண்டாடப்பட்டு வருகிறது. சபரிமலை ஐயப்பன்‌ கோயிலுக்குச்‌ செல்வது போல, மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு, மாசிக்‌ கொடையின்‌போது, பல்வேறு ஊர்களிலிருந்தும்‌ வெளி மாவட்டங்களிலிருந்தும்‌, கேரள மாநிலத்திலிருந்தும்‌, பெண்கள்‌ இருமுடி கட்டி வந்து வழிபடுவதால்‌, பெண்களின்‌ சபரிமலை என்றழைக்கப்படும்‌ அளவுக்குச் சிறப்பு வாய்ந்தது.

அண்ணாமலை

மண்டைக்காடு பகவதி அம்மன்‌ ஆலயத்துக்கு அருகாமையில்‌ ஹைந்தவ சேவா சங்கத்துக்குச் சொந்தமான இடத்தில்‌, ஹைந்தவ சேவா சங்கம்‌ அரங்கம்‌ அமைத்து 1936-ம்‌ ஆண்டு முதல்‌ மாசிக்‌ கொடை விழாவின்‌போது, இந்து சமய மாநாடு நடத்தி வருகிறது. இந்த மாநாட்டை ஹைந்தவ சேவா சங்கம்‌ தலைமையேற்று நடத்தி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்துக்கே பெருமை சேர்க்கும்‌ வண்ணம்‌, வீரம்‌, பக்தி, வரலாறு தொடர்பான சமய வகுப்புகள்‌, கலைகள்‌, நாடகங்களை அந்தச் சங்கத்தினர் நடத்திவருகின்றனர்‌. மேலும்‌, மாணவ மாணவிகளுக்குக் கல்வி உதவி, சமய புலவர்கள்‌, மாற்றுத்திறனாளிகளின்‌ வாழ்வாதாரம்‌ மேம்படத் தேவையான உதவிகளும்‌ இந்த மாநாட்டில்‌ ஆண்டுதோறும்‌ வழங்கப்பெற்றுவருகின்றன. 2023-ம்‌ ஆண்டுக்கான, 86-வது வருட மண்டைக்காடு இந்து சமய மாநாடு, மார்ச்‌ 5-ம் தேதி முதல்‌ 14-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

அண்ணாமலை அறிக்கை

இந்த நிலையில்‌, இந்து சமய அறநிலையத்‌துறை, ஹைந்தவ சேவா சங்கம்‌ இந்த மாநாட்டை நடத்தக்‌ கூடாது என்று உத்தரவிட்டிருப்பதாகத்‌ தெரியவருகிறது. 85 ஆண்டுகளாகத்‌ தொடர்ந்து நடந்துவரும்‌ சமய மாநாட்டை, எந்தக்‌ காரணமும்‌ இல்லாமல்‌ தடுக்க முயல்வது, தி.மு.க அரசின்‌ இந்து மத விரோதப்‌ போக்கையே காட்டுகிறது.

தி.மு.க அரசு, மதச்‌சார்பின்மையையும்‌, தங்கள்‌ கட்சிக்‌ கொள்கைகளில்‌ ஒன்றான போலி நாத்திகத்தையும்‌ குழப்பிக்‌ கொண்டு, தொடர்ந்து இந்து மத நம்பிக்கைகளிலும்‌, வழிபாட்டு முறைகளிலும்‌ தலையிட்டுக்‌ கொண்டிருக்கிறது. அதன்‌ அடுத்த கட்டமாக தற்போது, காரணமேயின்றி, அரசியலமைப்புச்‌ சட்டம்‌ மக்களுக்கு வழங்கியிருக்கும்‌ அடிப்படை உரிமையான வழிபாட்டு உரிமையையும்‌ தடுத்து நிறுத்த முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.

சேகர் பாபு – ஸ்டாலின்

ஹைந்தவ சேவா சங்கம்‌, அனைத்து சமூகங்களைச்‌ சேர்ந்த இந்து சமய மக்களையும்‌ ஒன்றிணைத்தது மட்டுமல்லாமல்‌, இந்து தர்மத்தின்‌ ஞானத்தை அனைவருக்கும்‌ பரப்புவதற்கு பெரும்‌ முயற்சிகளை எடுத்து வரும்‌ அமைப்பு. இந்த அமைப்பின்‌ ஆன்மிகப்‌ பணிகளைத்‌ தடுப்பதன்‌ மூலம்‌, யாரையோ மகிழ்விக்கலாம்‌ என்ற எண்ணத்தில்‌ ஆட்சியாளர்கள்‌ இருப்பார்களேயானால்‌, அவர்கள்‌ எண்ணம்‌ தவறானது. மத வேற்றுமை இன்றி, அனைத்து மக்களும்‌ நல்லிணக்கத்தோடு அமைதியாக வாழ்ந்துவரும்‌ சூழ்நிலையில்‌, பொதுமக்களிடையே இது போன்ற கசப்புணர்வைத்‌ தூண்டிவிடும்‌ செயல்களில்‌, அறிவார்ந்த எந்த அரசும்‌ ஈடுபடாது.

அண்ணாமலை

மாநிலம்‌ முழுவதும்‌ சீர்குலைந்து கிடக்கும்‌ சட்டம்‌ ஒழுங்கை காப்பாற்ற வக்கற்ற தி.மு.க, இது போன்ற மக்களைப்‌ பிளவுபடுத்தும்‌ தீய எண்ணத்தில்‌ செயல்படுவதையும்‌, பொதுமக்களின்‌ அடிப்படை உரிமையான வழிபாட்டு உரிமைகளில்‌ தலையிடுவதையும்‌ உடனடியாக நிறுத்திக்‌ கொள்ள வேண்டும்‌. இந்து சமய அறநிலையத்‌துறை என்பது ஆலய மேம்பாட்டுக்கே தவிர, ஆளுங்கட்சியின்‌ கொள்கைகளைப்‌ புகுத்துவதற்கல்ல என்பதை, திறனற்ற தி.மு.க அரசு உணர வேண்டும்‌ என்பதை தெரிவிப்பதோடு, உடனடியாக மண்டைக்காடு கோயிலில்‌ நடக்கும்‌ 86-ம்‌ ஆண்டு சமய வகுப்பு மாநாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட வேண்டும்‌ என்று தமிழக பா.ஜ.க-வின் சார்பில்‌ வலியுறுத்துகிறேன்‌” என அண்ணாமலை கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.