ஈரோடு மாவட்டம், கனிராவுத்தர் குளம் பகுதியில் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து இரண்டாம் நாளாக பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின் போது எடப்பாடி பழனிசாமி பேசியது தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 21 மாதங்களாகியும், ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஒரு பணியை கூட செய்யவில்லை. ஆனால் இதே தொகுதியில் ரூ.484 கோடி செலவில் ஊராட்சிக்கோட்டையில் இருந்து 28 கி.மீ. குழாய் மூலமாக நல்ல குடிநீரை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினோம்.
இங்குள்ள கனிராவுத்தர் குளம் ரூ.6 கோடியில் புனரமைக்கப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என்று கூறும் மு.க.ஸ்டாலின் இங்கு வரும் போது இதை கவனித்து பார்க்க வேண்டும். சத்தி சாலையையும், திண்டல் ரிங் ரோடு இணைப்புச்சாலை திட்டம் நாங்கள் கொண்டு வந்தது என்ற காரணத்துக்காக தி.மு.க. அரசு இதை நிறுத்தி வைத்து விட்டது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற 21 மாதங்களில் தமிழக மக்களுக்கும், ஈரோட்டு மக்களுக்கும் எதையும் செய்யவில்லை.

தற்போது யானைகள் முகாமிட்டிருப்பதை போல 25 அமைச்சர்கள் இங்கு முகாமி்ட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு அமைச்சரும் வீடு, வீடாகச் சென்று மக்கள் குறைகளை கேட்டு குறித்து கொள்கிறார்களாம். தேர்தல் முடிந்த பிறகு உங்களுக்கு எல்லாம் செய்து தருவதாகக் கூறுவார்கள். ஆனால் தேர்தலுக்கு பின் மாயாமாகி விடுவார்கள். எனவே மக்கள் ஏமாந்து விட வேண்டாம். இடைத்தேர்தல் வந்ததால், உங்களை மந்திரிகள் சந்திக்கிறார்கள். இல்லாவிட்டால் இவர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா. மாதம் ஆயிரம் வீதம் குடும்ப பெண்களுக்கு வழங்குவதாகக் கூறிய கவர்ச்சித் திட்டத்தை நம்பி நீங்களும் வாக்களித்தீர்கள். உங்களுக்கு கிடைத்ததா. தி.மு.க. அளித்ததெல்லாம் வெற்று வாக்குறுதிகள். பொய் வாக்குறுதிகள்
அவர்கள் வெளியிட்ட 525 வாக்குறுதிகளில் முக்கியமான வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. நாங்கள் 7 லட்சம் முதியோருக்கு வழங்கி வந்த உதவித்தொகையை நிறுத்தி விட்டனர். நான் இதை சுட்டிக்கட்டிய பின் பரிசீலிப்பதாகக் கூறுகின்றனர்.
2010-ல் நீட் தேர்வை அறிவித்தது காங்கிரஸும், தி.மு.க.வும் தான். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் ஜெயலலிதா சட்டப்போராட்டம் நடத்தியும் நீட் தேர்வை நீதிமன்றம் ரத்து செய்ய முடியாது என்று கூறி விட்டதால் அதை அறிமுகம் செய்தோம். ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தெரியும் என்று கூறிய உதயநிதி ஸ்டாலினும், ஸ்டாலினும் ஏன் இன்னும் அதை ரத்து செய்யவில்லை. இப்போ இடைத்தேர்தல் வருது. நீட் தேர்வை ரத்து செய்யற ரகசியத்தை இப்பவாச்சும் சொல்லப்பா… இந்த மாணவர்கள் எல்லாம் நீட் தேர்வில் இருந்து தப்பிக்கட்டும்.

மொத்தமுள்ள 3,145 மருத்துவக் கல்விக்கான சீட்டில் அரசுப்பள்ளியில் படிக்கும் 3.80 லட்சம் மாணவர்களில் 2018-19-ல், 9 அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டும் மருத்துவப் படிப்பில் சேர முடிந்தது. இந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள் இட ஒதுக்கீடு வழங்கியதன் பலனாக அரசுப்பள்ளியில் பயிலும் 564 மாணவர்கள் இந்த ஆண்டில் மருத்துவக் கல்லூரியில் சேரும் கனவு நிறைவேறியிருக்கிறது. அவர்களின் மருத்துவக் கல்விக்கான செலவையும் அரசே ஏற்கும் என்று உத்தரவிட்டதும் நாங்கள் தான். ஆனால் கல்விக்கடன் ரத்து செய்வதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அதை செய்ததா.
இப்படி படித்தவர்களையும், படிக்காதவர்களையும் ஏமாற்றும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது. விசைத்தறியாளர்களுக்கு வழங்கப்படும் 750 யூனிட் இலவச மின்சாரத்தை 1000 யூனிட்டாக அதிகரிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் ஜன. 12-ல் பேசினேன். அப்போதெல்லாம் பேசாத மின்சாரத் துறை அமைச்சர், ஈரோட்டில் 2 நாளுக்கு முன் 1000 யூனிட் இலவச மின்சாரம் தருவதாக அறிவிக்கிறார். தேர்தல் வந்தால் தான் தி.மு.க.வுக்கு மக்கள் ஞாபகம் வரும். இதை நம்பி ஏமாந்து விட வேண்டாம். குடும்ப வாரிசு அரசியலுக்கு இந்தத் தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இஸ்லாமிய மக்களுக்கு அதிக நன்மைகள் செய்தது அ.தி.மு.க. அரசு தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்றார்.

இதைத் தொடர்ந்து, நெரிக்கல்மேடு பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, “இந்தப் பகுதியில் எங்களுக்கு 6.30 மணிக்கு தேர்தல் பிரசாரம் செய்ய நேரம் ஒதுக்கியிருந்தனர். ஆனால் 7.30 மணி வரையிலும் எம்.பி.கனிமொழி இப்பகுதியில் பேசி விட்டு செல்கிறார். அ.தி.மு.கவின் பிரசாரத்தை முடக்க வேண்டும் என்று திட்டமிட்டே இவ்வாறு செய்கின்றனர். மக்களைக் கூட்டம், கூட்டமாக அடைத்து வைக்கும் பணிகளை ஆளுங்கட்சி செய்து வருவதாக தேர்தல் ஆணையத்திடம் ஆதாரத்துடன் புகாரளித்தோம்.
ஆனால், அவர்கள் எந்த இடத்திலும் யாரையும் அடைத்து வைக்கவில்லை என்று கூறுகிறார்கள். தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். நாங்கள் சேகரித்து வைத்துள்ள ஆதாரங்களுடன், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இங்குள்ள தேர்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்போம். எதிர்க்கட்சிகள் கொடுக்கும் புகாரை முறையாக தேர்தல் அதிகாரிகள் விசாரிக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, வீரப்பன்சத்திரம், சின்ன மாரியம்மன் கோயில் பகுதியில், “இந்த பகுதியில் தேர்தல் பொறுப்பாளராக தி.மு.க. சார்பில் நியமிக்கப்பட்டு்ள்ள செந்தில் பாலாஜி, 5 கட்சிகளுக்கு சென்று வந்தவர். அடுத்த தேர்தலில் எந்த கட்சியில் இருப்பார் என்று கூற முடியாத நபர்தான் அவர். முன்பு அவரை கடுமையாக விமர்சனம் செய்தவர் ஸ்டாலின். தி.மு.க.வுக்காக பாடுபட்ட பலரையும் ஓரங்கட்டி விட்டு புதிதாக வந்த அவரை அமைச்சராக்கினார்.
அவர்தான் அதிக அளவில் முதல்வருக்கு, கப்பம் கட்டும் அமைச்சர். மற்ற கட்சியில் எல்லாம் மக்களுக்கு நன்மை செய்பவரே முதன்மை அமைச்சராக இருப்பார். ஆனால் தி.மு.க.வில் மட்டும் தான் அதிக கப்பம் கட்டுபவரை முதன்மை அமைச்சர் என்கிறார்கள். அப்படிப்பட்டவர் தான் இங்கு பொறுப்பு வகித்து வருகிறார். ஒவ்வொரு வீட்டுக்கும் சிக்கன் வாங்கி கொடுப்பதாக கூறுகிறார்கள். அவரிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். வாக்குகளை பெறுவதற்காக சிக்கனில் ஏதாவது மாயாஜாலம் செய்து விடப்போகிறார். தேர்தல் முடிந்ததும் அவர் மாயமாகி விடுவார்.

அவர் எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள். அவர் சம்பாதித்ததை தரவி்ல்லை. மக்களிடம் கொள்ளை அடித்ததைத் தான் கொடுக்கிறார். அதை வாங்கிக் கொள்ளுங்கள். ஓட்டை மட்டும் எங்களுக்கு போட்டுங்க. பொய் வாக்குறுதிகளை கொடுத்து வாக்குகளை சேகரித்த தி.மு.கவுக்கு எச்சரிக்கை மணியடிக்கும் வகையில் இந்தத் தொகுதியில் அ.தி.மு.க.வை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார்.