உளுந்தூர்பேட்டை, சுப்ரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ. 50 கோடி மதிப்பீட்டிலான சொத்துக்கள் திருக்கோயில் வசம் சுவாதீனம்

கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும்,   இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தலின்படியும் இந்து சமய  அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ளததிருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

அதன்படி இன்று (17.02.2023) கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை, உ.கீரனூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 50 கோடி மதிப்பீட்டிலான சொத்துக்கள் மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை, உ.கீரனூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்குச் சொந்தமாக உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் அருகில் 6,080 சதுர அடி பரப்பளவில் தரைத்தளத்தில் இருந்த ஹோட்டல், முதல் மற்றும் இரண்டாம் தளத்தில் 23 அறைகள் கொண்ட தங்கும் விடுதிகள் வணிக பயன்பாட்டிற்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது.

நீண்டகாலமாக வாடகை செலுத்தாமல் அனுபவித்து வந்ததால், விழுப்புரம் இணை ஆணையர் நீதிமன்ற சட்டப்பிரிவு – 78 உத்தரவின்படி, கள்ளக்குறிச்சி உதவி ஆணையர் க.சிவாகரன் முன்னிலையில் காவல்துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்களின் உதவியுடன் இன்று (17.02.2023) ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதி பூட்டி சீலிடப்பட்டு, திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இச்சொத்துக்களின்  தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.50 கோடியாகும்.

இந்நிகழ்வின்போது வட்டாச்சியர் (ஆலய நிலங்கள்) பி.அசோக், திருக்கோயில் செயல் அலுவலர் வ.மதனா, ஆய்வாளர்கள்  மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.