ஐந்து மாவட்ட விவசாயிகள், பொதுமக்களே ‘அலார்ட்’ வைகை அணை நீரை சிக்கனமாக பயன்படுத்துங்க: கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க ஆலோசனை

ஆண்டிபட்டி: தேனி மாவட்டத்தில் வருசநாடு, வெள்ளிமலை, அரசரடி போன்ற பகுதிகளில் உருவாகும் மழைநீர் வைகை ஆற்றில் வெள்ளமாக ஓடிக் கொண்டிருந்தது. இந்த வைகை ஆற்றுக்கு குறுக்கே அணை கட்டி அந்த தண்ணீரை சேமித்து வைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஆண்டிபட்டி அருகே அணை கட்ட முடிவு செய்யப்பட்டு, கடந்த 1959ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. இந்த அணையின் மொத்த உயரம் 111 அடியாகும். 71 அடி வரை தண்ணீரை தேக்கி கொள்ளலாம். இந்த அணைக்கு வருசநாடு போன்ற பகுதிகளில் பெய்து வரும் மழை மூலவைகை ஆற்றின் வழியாக அணைக்கு நீர் வரத்தாக வந்து சேரும்.

பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அணைக்கு நீர்வரத்தாக வந்து சேரும். கொட்டக்குடி ஆறு போன்று பகுதிகளில் பெய்யும் மழை அணைக்கு நீர்வரத்தாக வந்து சேரும். அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கு விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பிரதான ஆதாரமாக விளங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் ஜூன் மாதத்தில் முதல் போகத்திற்கும், வடகிழக்கு பருவமழை தொடங்கும் அக்டோபர் மாதம் இரண்டாம் போகத்திற்கும் தண்ணீர் திறக்கப்படும். மேலும் தண்ணீர் தேவைக்காக ஆற்றின் வழியாக சிவகங்கை ராமநாதபுரம் பகுதியிலும் தண்ணீர் திறக்கப்படும்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டார பகுதிகளில் உள்ள கண்மாய்களை நிரப்புவதற்கு 58ம் கால்வாய் பகுதியில் தண்ணீர் திறக்கப்படும். வைகை அணை பாசனத்தின் கீழ் 1 லட்சத்து 36 ஆயிரத்து 109 ஏக்கர் பரப்பளவில் பாசனம் செய்யப்படுகிறது. பெரியார் பாசனத்தின் கீழ் 1 லட்சத்து 50ஆயிரத்து 43 ஏக்கர் பரப்பளவில் பாசனம் செய்யப்படுகிறது. இதில் 45 ஆயிரத்து 41 ஏக்கர் இருபோக பாசனப்பகுதியாகவும், 85 ஆயிரத்து 563 ஏக்கர் ஒருபோக பாசனப் பகுதியாகவும், 38 ஆயிரத்து 248 ஏக்கர் விரிவாக்கப்பட்ட பெரியார் பிரதான கால்வாயாகவும் உள்ளது.

வைகை அணை நீர்‌பிடிப்பு பகுதிகளில் கடந்த தென்மேற்கு பருவமழை காலங்களில் பலத்த மழை பெய்தது. அப்போது முல்லைப் பெரியாறு அணையில் இருந்தும் அதிகப்படியாக தண்ணிர் திறந்து விடப்பட்டது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து. அணையின் நீர்மட்டமும் கடந்த ஆண்டு ஆக. 1ம் தேதி முழுக்கொள்ளளவான 69 அடியை எட்டியது. வைகை அணை நீர்மட்டம் கடந்த ஆண்டு இரண்டு முறை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணையில் இருந்து அதிகப்படியான தண்ணீர் பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் உபரிநீராகவும் வெளியேற்றப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக 6 நாட்களுக்கு 1140 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆகஸ்ட் 27ம் தேதி சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்களுக்கு நீரை பெருக்கும் வகையில் வைகை அணையில் இருந்து மூன்று கட்டமாக 1377 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் செப்டம்பர் 7ம் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட ஒருபோக பாசனத்திற்கு அணையில் இருந்து 120 நாளைக்கு 8461 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. செப்டம்பர் 9ம் தேதி வைகை அணை 58ம் கிராம கால்வாய் பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அதன் பின்னர்,‌தென்மேற்கு பருவமழை முடிந்த நிலையில், வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதம் தொடங்கியது. இதனால் கடந்த அக்டோபர் 18ம் தேதி அணையின் நீர்மட்டம் மீண்டும் 69 அடியாக உயர்ந்து. அணையில் இருந்து 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டத்தை 69 அடியில் இருந்து 70 அடியாக உயர்த்த பொதுப்பணித்துறையினர் முடிவு செய்தனர். வடகிழக்கு பருவமழை தேனி மாவட்டத்தில் போதுமான அளவு கை கொடுக்கவில்லை. அதன் பின்னர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் போதுமான அளவு மழை பெய்யவில்லை.

இதனால் அணைக்கு நீர்வரத்து குறைந்து அணையின் நீர்மட்டமும் படிப்படியாக சரியத் தொடங்கியது. வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 55.12 அடியாக உள்ளது. இதில் 15 முதல் 20 அடி வரையில் வண்டல் மண் படிந்துள்ளதால் வைகை அணையில் குறைந்த அளவு தண்ணீரே இருப்பில் உள்ளது. வைகை அணையில் இருந்து மதுரை மாநகர், தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம், உசிலம்பட்டி மற்றும் சேடப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பகுதிகளின் குடிநீர் ஆதாரமாக வைகை அணை மட்டுமே இருப்பதால், தற்போது இருப்பில் உள்ள தண்ணீரை குடிநீர் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

கோடை காலம் தொடங்க உள்ளதால் தடையின்றி குடிநீர் வழங்கும் வகையில் தண்ணீரை இருப்பு வைப்பதுடன், வைகை அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கும் வரையில் வைகை அணை தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.கோடைகாலத்தில் அதிகரிக்கும் வெயிலால் அணையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நீரும் ஆவியவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் வைகை அணையில் இருக்கும் நீரை சேமித்து முறையாக பயன்படுத்த வேண்டும் என ஐந்து மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்தாண்டை விட இந்தாண்டு குறைவு
வைகை அணையின் நீர்மட்டம் கடந்தாண்டை விட இந்தாண்டு குறைந்தே காணப்படுகிறது. அணையின் நீர்மட்டம் கடந்த ஆண்டு இதே நாளில் 68.70 அடியாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 55.12 அடியாக குறைந்து உள்ளது. கடந்த ஆண்டை விட வைகை அணை நீர்மட்டம் 14 அடி குறைந்து காணப்படுகிறது. மேலும் கோடை காலம் தொடங்கியுள்ளதால் அணையின் நீர்மட்டம் மேலும் சரியும் நிலையில் இருக்கிறது. தண்ணீரை தேக்கி வைத்து பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்த பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீரையும் முறை வைத்து திறந்து விடுகின்றனர். மேலும் கோடை காலம் தொடங்கி தற்போதைய வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை அளவு அடியோடு நின்று விட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.