பெங்களூரு: கர்நாடகா சட்டசபையில் காதில் பூவை வைத்துக் கொண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகாவில் இன்று சட்டசபை கூட்டம் தொடங்கிய போது, ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், தங்களது காதில் பூ வைத்துக்கொண்டு அவைக்கு வந்தனர். அப்போது சித்தராமையா கூறுகையில், ‘மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை. மாறாக மக்களை முட்டாள்களாக்கி வருகிறது. ஆளும் பாஜக அரசு தனது தேர்தல் அறிக்கையில் 600 வாக்குறுதிகளை அளித்தது.
ஆனால் அவற்றில் 10 சதவீதம் வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை’ என்றார். சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் காதில் பூ வைத்துக் கொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்ததால், அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து முதல்வரும், நிதியமைச்சருமான பசுவராஜ் பொம்மை, இந்தாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வரும் மே மாதம் கர்நாடகாவில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்றைய பட்ஜெட் பாஜக அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.