பெங்களூரு: கர்நாடகாவில் பாஜக அரசு போலியான திட்டங்களை அறிவித்து மக்கள் காதில் பூ சுத்தி வருகிறது என கூறி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் காதில் பூ சுற்றிக்கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 2 மாதங்களில் கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முதல்முறையாக காகிதம் இல்லா பட்ஜெட் கர்நாடக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. காலை 10:30 மணி முதல் ராகுகாலம் என்பதால் முதல்வர் பசவராஜ் பொம்மை தனது உரையை 10:15 மணிக்கு தொடங்கினார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்கள் காதில் பூ சுற்றி இருந்தனர்.
பூவை எடுத்துவிட்டு அமருமாறு முதல்வர் கோரிக்கை விடுத்த நிலையில், ஒன்றிய அரசு போலியான திட்டங்கள் மூலம் பொதுமக்கள் காதில் பூ சுற்றுகிறது. அதனை எடுத்துரைக்க தாங்களும் காதில் பூ சுற்றி வந்திருப்பதாக தெரிவித்தனர். அப்போது பாஜக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அவையில் கூச்சம், குழப்பம் நிலவியது. தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, அனைத்து தடைகளையும் உடைத்து மேகதாது அணை கட்டப்படும் என்று பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை கட்ட கடந்த பட்ஜெட்டில் கர்நாடகா 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. அணைக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றி உள்ளது. இந்நிலையில் வழக்கை முடிவுக்கு கொண்டுவந்து அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். மேலும் கர்நாடகாவின் ராம நகராவில் ராமர் கோவில் கட்டப்படும் என்றும் பட்ஜெட் உரையில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.