கர்நாடக பட்ஜெட் தாக்கல் செய்த பாஜக; காதில் பூ வைத்த காங்கிரஸ்… சூடுபிடிக்கும் 2023 தேர்தல்!

கர்நாடகா மாநிலத்தில் இன்னும் இரண்டு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவிருக்கிறது. இதனை அடுத்து 2023 வது ஆண்டிகிற்கான இடைக்கால பட்ஜெட்டை அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். இவர் நிதித் துறையையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதால், பட்ஜெட் தாக்கலை தானே செய்தார்.

சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பட்ஜெட் உரை நீடித்தது. கர்நாடகாவில் தேர்தல் வர இருப்பதால், பல கவர்ச்சிகரமான திட்டங்களை இந்த முறை பாஜக அரசு அறிவிக்கும் என எதிர் பார்க்கப்பட்டது. தெற்கு பகுதியில் பாஜக ஆளும் மாநிலமாக கர்நாடக மாநிலம் மட்டுமே இருக்கிறது. மற்ற மாநிலங்களில் பாஜக ஆட்சியை அமைக்க திணறி வரும் நிலை உள்ளது. எனவே இதனை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் பாஜக தீவிரமாக உள்ளது.

அந்த வகையில், அயோத்தியை அடுத்து கர்நாடகாவில் ராமர் கோயில், மடங்கள் மற்றும் ஆலயங்கள் மேம்படுத்தப்படும், பெங்களூரு மெட்ரோ திட்டம் விரிவாக்கம், விவசாய கடன் தொகை உயர்வு உள்ளிட்ட திட்டங்களை பசவராஜ் பொம்மை அறிவித்தார்.

கர்நாடக பட்ஜெட் 2023: ராமர் கோயில் சர்ப்ரைஸ்… தெற்கே உதிக்கும் பிரம்மாண்டம்!

பட்ஜெட் தாக்கலின்போது சட்டசபைக்கு வருகை தந்த கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியினர் காதில் பூ வைத்து கொண்டு வந்தனர். பொதுவாக ஒருவரால் ஏமாற்றப்பட்டதை குறிப்பதற்காக ‘காதில் பூ வைக்காதே’ என கூறுவது வழக்கம்.

அந்த வகையில் கர்நாடகாவில் ஆளும் பாஜகவினர் கடந்த தேத்தலின் பொது கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. இதே போல கடந்த நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் குறிப்பிட்ட எந்த திட்டத்தையும் பாஜக அரசு முழுமையாக செய்யவில்லை என்பதை மறைமுகமாக கூறி, பாஜக ஏமாற்றி விட்டதாக குறிப்பிட காங்கிரஸ் எம் எல் ஏக்கள் காதில் பூ சுற்றி வந்ததாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து #KiviMeleHoova, அதாவது காதில் பூ வைப்பது என்பதை குறிக்கும் சொல் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வந்தது.

பட்ஜெட் உரை நடந்துகொண்டு இருக்கும் போதும் காங்கிரஸ் கட்சியினர் காதில் இருந்து பூவை எடுக்காமல் இருந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான சித்தராமையா, பாஜக அரசு எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் தொடர்ந்து பொய் பிரச்சாரத்தை செய்து வருவதாக அம்மாநில முதல்வரை கடுமையாக விமர்சனம் செய்து வருவார்.

மற்ற காங்கிரசாரை போல அவரும் காதில் பூ வைத்து வந்தது அனைவரையும் கவனிக்க வைத்தது. பாஜக கடந்த தேர்தல் அறிக்கையில் கூறிய 600 வாக்குறுதிகளில் 10 சதவீத வாக்குறுதிகளை மட்டும் தான் செய்து இருப்பதாக சித்தராமையா தெரிவித்து இருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.