கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் பலி: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

சென்னை: கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் பலியான சம்பவத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாலாறும் காவிரியும் கலக்கும் இடத்தில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். வழக்கம்போல மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் கோவிந்தப்பாடியை சேர்ந்த மீனவர் ராஜா கொல்லப்பட்டிருக்கிறார்.

துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்த ராஜாவின் சடலம் பாலாறு பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. கர்நாடக வனத்துறை தமிழ்நாட்டில் இருந்து வேலைக்கு செல்லும் கூலித் தொழிலாளர்கள் மீது இரக்கமற்று, துப்பாக்கிச் சூடு தொடர்ந்து நடத்தி வருகிறது. கர்நாடக வனத்துறையின் செயலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

மரணமடைந்த மீனவர் ராஜா குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக தக்க விசாரணை மேற்கொள்ளவும், மீனவர் ராஜா குடும்பத்துக்கு மறுவாழ்வுக்கு இழப்பீடு வழங்கவும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது” என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.