சென்னையில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் மனைவியை கொன்ற கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (34). இவரும், அம்மு என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 9 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் அம்முவுக்கும், அவரது உறவினர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக சுற்றி திரிந்துள்ளனர். இதையறிந்த சீனிவாசன் மனைவியை கண்டித்துள்ளார். இருப்பினும் அம்மு அந்த வாலிபருடன் தொடர்ந்து பழகி வந்ததால் ஆத்திரமடைந்த சீனிவாசன் கடந்த 2018ஆம் ஆண்டு கழுத்தை நெரித்து அம்முவை கொலை செய்தார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மனைவியை கொன்ற கணவர் சீனிவாசனை கைது செய்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி, சீனிவாசன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 5000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.