வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கள ஆய்விற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு பயணம் செய்து வருகிறார். அந்த வகையில், சேலம் சென்றபொழுது யாரும் எதிர்பாரா வண்ணம் மாடர்ன் தியேட்டர்ஸ்’ன் நுழைவு வாயில் முன் நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டார். சேலத்தின் வரலாறு, தமிழ்ச் சினிமாவின் வரலாறு, திராவிட இயக்க வரலாறு என பல புள்ளிகளை ஒருங்கிணைக்கும் இடம் தான் மாடர்ன் தியேட்டர்ஸ்.
இயல் இசை நாடகம் என முத்தமிழும் சங்கமிக்கும் சினிமாவும் திரையுலகமும் கோடம்பாக்கம் தான் சினிமாவின் முகவரி என்ற பிம்பக் கட்டமைபிற்கு முன்பே தோன்றியது தான் மாடர்ன் தேட்டர்ஸ் லிட்.
1940ல் துவங்கிய ஜெமினி ஸ்டுடியோ, 1945ல் துவங்கிய AVM பிக்சர்ஸ் என சென்னையில் சினிமாவுக்கான தளங்கள் இருந்தபோது சேலத்தில் 1937ல் துவங்கியது தான் மாடர்ன் தியேட்டர்ஸ் எனும் பழமையான திரைப்பட படப்பிடிப்பு தளம்.

சினிமாவிற்காக வட இந்தியா செல்ல வேண்டிய தேவையை முற்றிலும் குறைத்து; தென்னிந்தியாவின் மிகப்பெரிய திரைப்படக்கூடம், மிகப்பெரிய படப்பிடிப்புத் தளம், உள்ளரங்கம், பாடல் பதிவு செய்யும் அறை (Recording Theatre), திரைப்படத்தை போட்டுப் பார்க்கும் இடம் (Preview Theatre), இசை கோர்ப்பு பகுதி என ஒரு திரைப்படம் முழுமையாக அமைய தேவையான அனைத்து தொழில்நுட்ப அம்சங்களையும் உள்ளடக்கி தமிழ், மலையாளம் கன்னடம், தெலுங்கு, இந்தி, சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட படங்களை உருவாக்கியத் தளம் தான் மாடர்ன் தியேட்டர்ஸ்.
சென்னை பச்சையப்பாஸ் கல்லூரி, இங்கிலாந்து லீட்ஸ் பல்கலைக்கழகம் என படித்த டி. ஆர். சுந்தரம் அவர்கள் தான் மாடர்ன் தியேட்டர்ஸ்’ன் நிறுவனர். ஆரம்பக்காலத்தில் Angel Films உடன் இணைந்து சில படங்களை உருவாக்கியிருந்தாலும், 1935ல் மாடர்ன் தியேட்டர்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை உருவாக்கினார். பெரும்பாலும் தான் இயக்கிய படங்களை தயாரித்து வெளியிட்ட சுந்தரம் அவர்களின் முதற்படம் மட்டுமே நஷ்டம் ஏற்பட்டது. தனது தரமான படங்களால் எவ்வித பொருளாதார சிக்கல்கள் இன்றி நடத்திவந்தார்.

1937ல் சதி அகல்யா எனும் முதற்படத்தை கொடுத்தவர், தனது இறப்பிற்கு முன் முழுமையாக தயாரித்த கடைசிப் படம் 1962ல் வெளியான கவிதா. சுமார் கால் நூற்றாண்டுக் காலம் தமிழ் சினிமாவை கட்டிப்போட்ட கூடமும் இயக்குனரும் ஆண்டுக்கு மூன்று படங்களை கொடுத்த வரலாறும் உள்ளது.
மாடர்ன் தியேட்டர்ஸ் கண்ட சாதனைகள் என்பது ஒரு நூற்றாண்டுக்கு முன் அசாத்தியமான செயல் என்றே கூற வேண்டும். VFX போன்ற தொழில் நுட்பங்கள் வளர்ந்த காலத்திலே இரட்டை வேட படங்களுக்கு ரசிகர்கள் ஆர்பரிக்கும் சூழலில், தமிழ் சினிமாவின் முதன் இரட்டை வேட படமான உத்தமபுத்திரன் (1940) வெளியிட்டு வெற்றி கண்ட நிறுவனம்.

உலகில் முதன்முதலாக கலர் படத்தை கீவாகலர் (Gevacolor) எனும் தொழில்நுட்பம் கொண்டு 1947 கண்டுபிடிக்கப்பட்டதை, 1956ல் தமிழ் சினிமா `அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ மூலம் தமிழின் முதல் முழுநீள வண்ணக்கலர் படத்தை சுந்தரம் அவர்கள் இயக்கினார். அதுபோல மலையாளத்தில் முதல் பேசும்படமான பாலம் (1938) மற்றும் தமிழின் மிகப்பெரிய வெற்றிப்படமான மனேகரா போன்ற பல திரைப்படங்கள் இவர்களால் எடுக்கப்பட்ட காலத்தால் அழியாத காவியங்கள்.
தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதியின் திரைப் ப்யணம் துவங்கியது மாடர்ன் தியேட்டரில் தான். கருணாநிதியின் திறமையை உணர்ந்து கொண்ட டி.ஆர்.எஸ், அவரை மாடர்ன் தியேட்டர்ஸின் கதை வசன இலாகாவில் மாத சம்பளத்தில் பணிபுரியுமாறு அழைப்புவிடுத்தார். அதே காலக்கட்டத்தில் தான், எம்.ஜி.ஆரின் திரைப் பயணமும் துவங்கியது. எம்.ஜி.ஆர் நடிகராகவும் கலைஞர் வசனகர்த்தாவாகவும் இருந்து வெளிவந்த ‘மந்திரி குமாரி’ மாபெரும் வெற்றிப் படமாக அமைந்ததுடன் இருவரின் வாழ்க்கையிலும் திருப்புமுனையாகவும் அமைந்தது. எலீஸ் ஆர் டுங்கன் (Ellis R. Dungan) என்ற அமெரிக்க திரைப்பட இயக்குனர் தான் மந்திர குமார் மற்றும் பொன்முடி படங்களை இயற்றினார்.

எழுதியும் பேசியும் வளர்ந்த திராவிட இயக்கம், நாடகத்தை கொள்கை பரப்பும் கருவியாக எடுத்துக்கொண்டது என்றால் மிகையல்ல. கணேசன் என்ற இயற்பெயர் உடைய நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சிவாஜி நாடகத்தின் மூலம் பேரறிஞர் அண்ணாவால் அப்படி அழைக்கப்பட்டார். அது போல கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் வசன இலாக்காவிலும், கவியரசர் கண்ணதாசன் அவர்கள் பாடலாசிரியர் இலாக்காவிலும் மாத சம்பளத்துடன் வாழ்க்கையை மாடர்ன் தியேட்டர்ஸ் துவக்கியவர்கள் தான். பாரதிதாசன் (பொன்முடி), சலகண்டாபுரம் ப. கண்ணன் (பாசவலை), ஏ.வி.பி ஆசைதம்பி (சர்வாதிகாரி) போன்ற திராவிட இயக்க செயற்பாட்டாளர்களும் பின்னாளில் மக்கள் பிரதிநிதிகளாக இயங்கியவர்கள் மாடர்ன் தியேட்டர்ஸ்’ன் தூண்களாகவும் இருந்துள்ளனர்.
தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையின் (SIFCC) தலைவராக பணியாற்றிய TRS அவர்கள், அலுவலக கட்டிடத்தை சென்னையில் நிறுவினார். அதனை சிறப்பிக்கும் வகையில் சென்னை அண்ணா சாலையில் டி.ஆர். சுந்தரம் அவன்யூ எனச் சிறப்பித்துள்ளது. அத்துடன் இந்தியத் தபால் துறை ரூ.5 அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

TRS அவர்களின் மறைவிற்குப் பிறகு அவரது மகன் ராமசுந்தரம் தான் ஹாலிவுட் ஜேம்ஸ்பாண்ட் கதைகளை இரு வல்லர்கள், வல்லவன் ஒருவன் போன்ற திரைக்கதைகள் மூலம் தமிழ் சினிமாவில் நடிகர் ஜெய்சங்கர் மூலம் அறிமுகம் செய்து வைத்தார். பல்வேறு சிக்கல்களை சமாளித்து படங்களை இயக்கிய ராமசுந்தரம் அவர்கள், TRS அவரது மறைவுக்குப் பின் இருபதாண்டுகள் நடத்தப்பட்டாலும், 1982ல் வெற்றிநமதே என்ற திரைப்படத்துடன் மாடர்ன் தியேட்டர்ஸ் தனது 40 ஆண்டு கால சகாப்தத்தை முடித்துக்கொண்டது. தற்போது மாடர்ன் தியேட்டர்ஸ் இடம், சேலம்-ஏற்காடு பிரதான சாலையில் கடைகளும், காம்ப்ளெக்சும், சுந்தரம் காடர்ன்ஸ் என்ற அந்த இடம் நவீனத்திற்கு ஏற்றவாறு மாறியிருந்தாலும்; முதல் வண்ணப்படம் கொடுத்த நிறுவனம் வண்ணமிழந்த எதிர்காலத்திற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க மாடர்ன் தியேட்டர்ஸ் லிமிடெட் என பொறிக்கப்பட்ட பிரம்மாண்ட நுழைவு வாயில் மட்டும் சாட்சியாக எஞ்சியுள்ளது.
ஏராளமான திரைக் கலைஞர்களின் தாய் வீடாகவும், கலைஞர் மு கருணாநிதி, என்.டி. ராம ராவ், இதயக்கனி எம்.ஜி. ராமச்சந்திரன், ஜானகி ராமச்சந்திரன் என நான்கு முதலமைச்சர்களை திரைத்துறையில் அடையாளம் கண்ட மாடர்ன் தியேட்டர்ஸ் இடத்தை நடைமுறைக்கு கொண்டுவருவது சினிமாத் துறையினரின் கடமையாக கருதுகிறேன். தமிழ் சினிமாவின் வரலாறு என்ற புத்தகம் எழுதினால் மாடர்ன் தியேட்டர் தவிர்க்க முடியாத ஒன்றாக அமையும்.
பிரேம் முருகன்
மேச்சேரி, சேலம்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.