புதுடில்லி : பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக, பஞ்சாப் மற்றும் காஷ்மீர் மாநிலங்களைச் சேர்ந்த, இரண்டு இயக்கங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சக செய்திக்குறிப்பு :
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த, காலிஸ்தான் புலிப்படை, ஜம்மு-காஷ்மீர் கஸ்னாவி போர்ஸ் அமைப்புகள், பஞ்சாப் மற்றும் காஷ்மீரில் கொலை மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில், காலிஸ்தான் புலிப்படை பஞ்சாப்பில், பயங்கரவாதத்தை மீண்டும் உருவாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் கஸ்னாவி போர்ஸ் அமைப்பு, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியுள்ளது.
லஷ்கர்-ஈ-தொய்பா, ஜெய்ஷ்- ஈ-முகமது, தெஹ்ரிகச் உல் முஜாஹிதின், ஹர்கத்-உல்-ஜிகாத்-இ-இஸ்லாமி உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளில் இருந்த, தீவிரவாதிகளை இது, பயன்படுத்தியுள்ளது.
இதையடுத்து, இந்த இரண்டு அமைப்புகளும், பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்படுகின்றன.
இவற்றுடன், சர்வதேச பப்பர் கஸ்லா என்ற, பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய, ஹர்விந்தர் சிங் சாந்து எனும் ரிண்டா என்பவர், பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதன் வாயிலாக, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின், முதலாவது அட்டவணையில் உள்ள, பயங்கரவாத அமைப்புகளின் எண்ணிக்கை, 44 ஆ்கவும், நான்காவது அட்டவணையில் உள்ள, பயங்கரவாதிகளின் எண்ணிக்கை, 54 ஆகவும் உயர்ந்துள்ளது.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்