பாகிஸ்தானில் பெட்ரோல் விலை வரலாறு காணாத உயர்வு: ஒரு லிட்டர் ரூ.272..!!

இஸ்லாமாபாத்,

அண்டை நாடான இலங்கையைப் போன்றே பாகிஸ்தானும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அங்கு அன்னியச்செலாவணி கையிருப்பு இல்லாமல் போகிற நிலை உருவாகி வருகிறது.

பாகிஸ்தான், சர்வதேச நிதியமான ஐ.எம்.எப்.பில் பெரும் கடன்கள் பெற்றுள்ள நிலையில், மேலும் 1.18 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய நாணய மதிப்புப்படி சுமார் ரூ.9.734 கோடி) கடன் கேட்கிறது. இந்த கடன் வந்தால்தான் அங்கு பொருளாதார நெருக்கடி நிலைமையைச் சமாளிக்க முடியும் என்ற சூழல் உள்ளது.

கடன் வாங்க பேச்சு வார்த்தை

இதையொட்டி பாகிஸ்தான் அரசு அதிகாரிகளும், சர்வதேச நிதியத்தின் அதிகாரிகளும் இஸ்லாமாபாத்தில் 10 நாட்கள் நீண்டதொரு பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. பாகிஸ்தானுக்கு கடன் வழங்க பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகளை அந்த நாடு மேற்கொள்ள வேண்டும் என்று சர்வதேச நிதியம் நிர்ப்பந்திப்பதாக தெரிகிறது. தற்போதும் பாகிஸ்தான் அதிகாரிகளும், சர்வதேச நிதியத்தின் அதிகாரிகளும் காணொலிக்காட்சி வழியாக பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

பெட்ரோல் விலை உயர்வு

இந்த நிலையில் பாகிஸ்தானில் பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை சர்வதேச நிதியத்துக்கு காட்டுகிற வகையில், அதிரடியாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி உள்ளனர்.

இதற்கு நேற்று முன்தினம் அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ‘மினி-பட்ஜெட்’ வகை செய்துள்ளது. பாகிஸ்தான் நிதி மந்திரி இஷாக் தார் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில் புதிதாக ரூ.17 ஆயிரம் கோடி அளவுக்கு வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த வரி விதிப்பில் பெட்ரோல் முக்கிய பங்கு வகிக்கிறது. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.22.20 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.272 ஆக உயர்ந்துள்ளது. இது அங்கு வரலாறு காணாத விலை உயர்வாக பார்க்கப்படுகிறது.

இந்த விலை உயர்வு நேற்று முன்தினம் நள்ளிரவில் அமலுக்கு வந்து விட்டது.

டீசல் விலை உயர்வு

உயர்வேக டீசல் விலை லிட்டருக்கு ரூ.17.20-ம், மண்எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.12.90-ம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வைத்தொடர்ந்து உயர்வேக டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.280 ஆகும். மண் எண்ணெயின் விலை லிட்டருக்கு ரூ.202.73 ஆகும்.

இந்த விலை உயர்வு பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானுக்கு கடன் தருவதற்கு பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியே ஆக வேண்டும் என்று சர்வதேச நிதியம் ஐ.எம்.எப். முன் நிபந்தனை விதித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பாகிஸ்தானில் மின்கட்டணமும் உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.