சென்னை எண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன். பிரபல ரௌடியான இவர்மீது ஏழு கொலை வழக்குகள் உப்டட 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த வழக்குகள் காரணமாக தனசேகரன் கைதுசெய்யப்பட்டு, கடலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இவர் நேற்று ஒரு வழக்கு விசாரணைக்காக விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் கடலூர் மத்தியச் சிறைக்குக் கொண்டுவரப்பட்டார். இந்த நிலையில், இன்று அதிகாலை தனசேகரன் 20-க்கும் மேற்பட்ட பி.பி மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார்.
சிறையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக்கிடந்த தனசேகரனை மீட்ட சிறைத்துறை அதிகாரிகள், அவரை சிகிச்சைக்காகக் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக தனசேகரனை விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தனசேகரனுக்குத் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் அபாயகரமான கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில், சிறையிலிருந்த பிரபல ரௌடி தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்ததது தொடர்பாக விசாரணை நடத்தத் தமிழ்நாடு சிறைத்துறை டி.ஜி.பி அம்ரேஷ் புஜாரி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து, சிறைத்துறை டி.ஐ.ஜி செந்தாமரைக்கண்ணன் விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் கடலூர் சிறையிலிருந்த ரௌடி தனசேகரன், அறையில் சிறை துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன் ஆய்வு செய்தபோது, செல்போன், சார்ஜர் பறிமுதல் செய்யப்பட்டன.
செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட சில வாரத்திலேயே ஒரு மர்மக் கும்பல் மணிகண்டன் வீட்டின் சமையலறை கதவைத் திறந்து பெட்ரோல் ஊற்றித் தீவைத்த சம்பவமும் நடந்திருந்தது. இது குறித்த விசாரணையில், செல்போன் பறிமுதல் செய்த ஆத்திரத்தில், தனசேகரன் கூலிப்படையின் உதவியுடன் இதை செய்ததும் தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக தனசேகரன், அவர் மனைவிமீது வழக்கும் பதிவுசெய்து விசாரணை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. பிரபல ரௌடி சிறையில் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.