புரோமோஷன் வீடியோவில் ஹிஜாப் போராட்ட க்ளிப் – இந்தியப் பயணத்தை ரத்து செய்த ஈரான் அமைச்சர்

புதுடெல்லி: ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசேன் அமீர் அப்துல்லாஹியான் தனது இந்தியப் பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். அடுத்த மாதம் இந்திய வெளியுறவு அமைச்சகமும், அப்சர்வர் ரிசேர்ச் ஃபவுண்டேஷன் என்ற அமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ரைஸினா டயலாக் நிகழ்ச்சியில் ஹொசேன் அமீர் கலந்து கொள்வதாக இருந்தது.

இந்நிலையில், அந்த நிகழ்ச்சிக்காக தயார் செய்யப்பட்டிருந்த புரோமோஷனல் வீடியோவில் ஈரானியப் பெண் ஒருவர் ஹிஜாபை எதிர்த்து தனது தலைமுடியை வெட்டும் காட்சியும், அருகில் ஈரான் தலைவர் இப்ரஹிம் ரைஸி படம் இருப்பதுபோலவும் ஒரு காட்சியும் இடம்பெற்றிருந்தது. இதனால், ஈரான் வெளியுறவு அமைச்சர் தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.

இதனை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஈரான் அரசு முறைப்படி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ ஒரு மாதத்திற்கு முன்னதாகவே வெளியிடப்பட்ட நிலையில், பயணம் ரத்து செய்யப்படுவதை இப்போது ஈரான் அறிவித்துள்ளது.

ரைஸினா உரையாடல் மாநாடு (Raisina Dialogue) என்பது ஆண்டுதோறும் இந்தியா நடத்தும் உலகளாவிய விவகாரங்களின் மாநாடாகும். இந்த ஆண்டுக்கான மாநாடு மார்ச் 3, 4 தேதிகளில் நடக்கிறது. இந்நிலையில், நிகழ்ச்சிக்கான புரோமோஷனல் வீடியோவில் இடம்பெற்றிருந்த சர்ச்சை க்ளிப்பை நீக்குமாறு ஈரான் வலியுறுத்தியது. ஆனால், அந்த வீடியோவில் குறிப்பிட்ட அந்தக் காட்சி இதுவரை நீக்கப்படாததால் ஈரான் வெளியுறவு அமைச்சர் மாநாட்டுக்கான தனது இந்தியப் பயணத்தை ரத்து செய்துள்ளார்.

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: ஈரானில் மாஷா அமினி என்ற இளம்பெண்ணின் மரணத்தைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்தது. ஹிஜாப்பை முறையாக அணியவில்லை என்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட அந்தப் பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்துக்கு நீதி கோரி, ஹிஜாப் அணிவதை எதிர்த்து ஈரானில் பெரும் போராட்டம் வெடிததது.

இந்தப் போராட்டத்தில் 300-க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். 15,000 பேர் வரை கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கு ஈரான் தூக்கு தண்டனை அறிவித்தது. சிலருக்கு மரண தண்டனையும் நிறைவேற்றப்பட்டன. இதனையடுத்து போராட்டங்கள் படிப்படியாக குறைந்தது. இந்நிலையில், ரைஸினா உரையாடல் மாநாடு புரோமோஷனல் வீடியோவில் ஈரானியப் பெண் ஒருவர் ஹிஜாபை எதிர்த்து தனது தலைமுடியை வெட்டும் காட்சியும், அருகில் ஈரான் தலைவர் இப்ரஹிம் ரைஸி படம் இருப்பதுபோல ஒரு காட்சியும் இடம்பெற்றிருக்க, ஈரான் ஆவேசத்தில் உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.