பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்: வங்காளதேசம்-நியூசிலாந்து இன்று மோதல்

கேப்டவுன்,

பெண்களுக்கான 8-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்த நிலையில் நேற்று நடந்த தொடரின் 11-வது லீக்கில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, இலங்கையை (ஏ பிரிவு) எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 112 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. அதிகபட்சமாக சமரவிக்ரமா 34 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மேகன் ஸ்கட் 4 விக்கெட்டுகளை அள்ளினார்.

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 15.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 113 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பெற்றது. 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது இதுவே முதல் நிகழ்வாகும். அலிசா ஹீலி 54 ரன்களுடனும் (43 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), பெத் மூனி 56 ரன்களுடனும் (53 பந்து, 7 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.

ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக பெற்ற 3-வது வெற்றி (ஹாட்ரிக்) இதுவாகும். ஏற்கனவே நியூசிலாந்து, வங்காளதேசத்தை தோற்கடித்து இருந்தது. 6 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் வகிக்கும் ஆஸ்திரேலியா ஏறக்குறைய அரைஇறுதியை உறுதி செய்துள்ளது. 3-வது லீக்கில் ஆடிய இலங்கைக்கு இது முதல் அடியாகும்.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான்- அயர்லாந்து அணிகள் சந்தித்தன. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 5 விக்கெட்டுக்கு 165 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான முனீபா அலி 102 ரன்கள் (68 பந்து, 14 பவுண்டரி) விளாசினார். பெண்கள் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் பாகிஸ்தான் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். அத்துடன் நடப்பு தொடரில் அடிக்கப்பட்ட முதல் சதமும் இது தான். அடுத்து களம் இறங்கிய அயர்லாந்து 16.3 ஓவர்களில் 95 ரன்னில் ஆட்டமிழந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது லீக்கில் ஆடிய பாகிஸ்தானுக்கு இது முதலாவது வெற்றியாகும்.

இன்றைய லீக் ஆட்டங்களில் வங்காளதேசம்-நியூசிலாந்து (மாலை 6.30 மணி), அயர்லாந்து-வெஸ்ட் இண்டீஸ் (இரவு 10.30 மணி) அணிகள் மோதுகின்றன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.