மாணவ, மாணவிகள்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சேலம் மாவட்ட பிரிவு சார்பில் மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பள்ளி மாணவர்கள் மட்டும் பங்கேற்றனர். இந்த நிலையில் 2-வது நாளான நேற்று நீச்சல், கூடைப்பந்து, கைப்பந்து, டேபிள் டென்னிஸ், இறகுப்பந்து, கிரிக்கெட் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.
போட்டிகள் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம், கோட்டை மாநகராட்சி கிளப், ஏ.என்.மங்கலம் பி.என்.ஆர். மைதானம், கொங்கு மெட்ரிக் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் 150-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளில் இருந்து 4,300 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
நீச்சல் போட்டி
குறிப்பாக நீச்சல் போட்டியில் 500-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு தடகளம், கால்பந்து, கபடி, ஆக்கி, சிலம்பம், சதுரங்கம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மாணவர்களுக்கான போட்டிகள் முடிவடைந்த பிறகு வருகிற 27-ந் தேதி பொதுப்பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும், 28-ந் தேதி அரசு ஊழியர்களுக்கும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் செய்து வருகிறார்.