மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர்கள் ஓட்டளிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்| Appointed members cannot vote in mayoral elections: Supreme Court

புதுடில்லி, ‘புதுடில்லி மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர்கள் ஓட்டளிக்க முடியாது’ என தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், தேர்தல் தொடர்பான அறிவிப்பை 24 மணி நேரத்தில் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

புதுடில்லி மாநகராட்சியில் உள்ள 250 இடங்களுக்கு கடந்த டிசம்பரில் தேர்தல் நடந்தது. இதில், 134 இடங்களைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றது. பா.ஜ., 104 இடங்களையும், காங்., ஒன்பது இடங்களையும் பெற்றன.

சுயேட்சை உறுப்பினர்கள் மூன்று பேர் வெற்றி பெற்றனர். இதையடுத்து, ஆம் ஆத்மி சார்பில் மேயர் பதவிக்கு ஷெல்லி ஓபராயும், துணை மேயர் பதவிக்கு ஆலே முகமது இக்பாலும் அறிவிக்கப்பட்டனர். பா.ஜ.,வும் மேயர் மற்றும் துணை மேயர் வேட்பாளர்களை களமிறக்கியது.

இதற்கிடையே, துணைநிலை கவர்னரால் பரிந்துரைக்கப்பட்ட நியமன உறுப்பினர்கள் வாக்களிப்பது தொடர்பான பிரச்னையால், மேயர் தேர்தலுக்காக நடத்தப்பட்ட மூன்று கூட்டங்களும் அமளியில் முடிந்தன.

இதையடுத்து, மேயர் தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரி, ஆம் ஆத்மி வேட்பாளர் ஷெல்லி ஓபராய், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:

இரு தரப்பு வாதங்களையும் கேட்டதில், மாநகராட்சி சார்பில் தரப்பட்ட பதிலை ஏற்கமுடியவில்லை. நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது என்பது அரசியல் சாசனத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்துக்குள் மேயர் தேர்தல் தொடர்பான அறிவிப்பை அதற்கான தேதியுடன் வெளியிட வேண்டும். முதல் கூட்டத்தில் நடத்தப்படும் மேயர் தேர்தலில் வெற்றி பெறுபவர்,துணை மேயர் தேர்தலை நடத்துவார்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ள புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ”இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. இதன்வாயிலாக, இரண்டரை மாதங்களுக்குப் பின் புதுடில்லிக்கு மேயர் கிடைக்கப் போகிறார்.

”துணை நிலை கவர்னரும், பா.ஜ.,வும் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரான உத்தரவுகளை எப்படி பிறப்பித்தனர் என்பது இந்த தீர்ப்பின் வாயிலாக நிரூபணமாகிஉள்ளது,” என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.