தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாய பெருமக்களிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வரை 16 இலட்சம் மெ.டன் அளவிற்கு நடப்பு கொள்முதல் பருவத்தில் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாய பெருமக்களின் பெயர் மற்றும் இதர விவரங்கள் மின்னணு முறையில் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரின் ஒப்புதல் பெற்று, முன்னுரிமை அடிப்படையில் டோக்கன் வழங்கப்பட்டு இணையதள வாயிலாக 100 சதவீதம் நெல் கொள்முதலுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
விவசாய பெருமக்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மணிகளுக்கான மொத்த தொகையும் சம்பந்தப்பட்ட விவசாய பெருமக்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இந்நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாய பெருமக்களிடமிருந்து கையூட்டு பெறுவதாக புகார்கள் வருவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முந்தைய மாதங்களில் இதுபோன்று வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் ஆய்வு செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்ட 90 நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் கடந்த வாரம் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தற்பொழுது டெல்டா மாவட்டங்களில் கூடுதல் பதிவாளர் தலைமையில் 9 விழிப்பு பணிக்குழு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு மேலும், மாவட்ட அளவில் பணிபுரியும் அலுவலர்களுக்கும் கள ஆய்வுகள் மேற்கொண்டு கண்காணிப்பு பணியை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முறைகேட்டில் ஈடுபடும் பணியாளர்கள் மீது தவறின் தீவிரப்படுத்த உத்தரவு தன்மைக்கு ஏற்ப நடவடிக்கை மேற்கொள்ளவும், அதிகபட்சமாக நிரந்தரமாக பணி நீக்கம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. விவசாய பெருமக்களும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தவறு ஏதேனும் இருப்பின் மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர்கள்/மண்டல மேலாளர்களுக்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைமை அலுவலக இலவச கட்டுப்பாட்டு அறைக்கும் (1800 599 3540) என்ற எண்ணிற்கும் தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.