சிம்லா ஹிமாச்சல பிரதேசத்தில், ‘ஸ்கூட்டி’ வாகனத்துக்கான பேன்சி நம்பரை பெற 1.12 கோடி ரூபாய் வரை ஏலம் நடந்துள்ளது வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஹிமாச்சல பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் உள்ள கோட்காய் நகரில், இருசக்கர வாகனங்களுக்கான பேன்சி நம்பரை பெறுவதற்கான ஏலம், சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
‘ஆன்லைன்’ வாயிலாக நடந்த ஏலத்தில், ‘ஹெச். பி., 99 – 9999’ என்ற கவர்ச்சிகரமான பேன்சி நம்பர் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதற்கான துவக்க விலை 1,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இதை வாங்க அப்பகுதியைச் சேர்ந்த 26 பேர் ஆர்வம் காட்டினர். ஏலத்தின் இறுதியில், ஸ்கூட்டி வாகனத்தின் உரிமையாளர் ஒருவர், 1.12 கோடி ரூபாய்க்கு இந்த எண்ணை ஏலத்தில் எடுத்தார்.
இது குறித்து, பதிவெண் வழங்கும் ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரி கூறியதாவது:
அறிவிக்கப்பட்ட பேன்சி நம்பரை, 1.12 கோடி ரூபாய்க்கு ஒருவர் ஏலத்தில் எடுத்துள்ளார்.
இந்த தொகையை, அவர் குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்தாவிட்டால், இந்த நம்பர் இரண்டாவது ஏலதாரருக்கு வழங்கப்படும். அடுத்தவர் ஏலத்தில் எடுத்துவிடக்கூடாது என்பதற்காக இவ்வளவு அதிகமான தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
பணத்தை செலுத்தாத முதல் ஏலதாரருக்கு அபராதம் விதிக்க யோசித்து வருகிறோம்.
இது போன்ற பிரச்னைகளைத் தவிர்க்க, ஏலத்தின் மொத்த தொகையில் 30 சதவீதத்தை முன்னதாக செலுத்தும் முறையை கொண்டு வரவும் ஆலோசித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வெறும் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஸ்கூட்டிக்கான பேன்சி நம்பரை 1.12 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்திருப்பது வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்