71 பேரை பலிகொண்ட நேபாள விமான விபத்தில் மனித தவறு இருப்பதாக சந்தேகம்… அறிக்கை

காத்மாண்டு,

நேபாளத்தில் கடந்த 15-ந்தேதி எட்டி விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த விபத்தில் இந்தியர்கள் உள்பட 72 பேர் பலியானார்கள். விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இதனை தொடர்ந்து விமான விபத்துக்கு விமானத்தின் இரு என்ஜின்களும் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ஜின் கோளாறு ஏற்பட்டதற்கு காரணம் விமானியின் தவறா அல்லது தொழில்நுட்ப கோளாறா என்பது குறித்த விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த விபத்து குறித்து 5 பேர் கொண்ட விசாரணை குழு புதிய தகவல்களை தெரிவித்துள்ளது. அதாவது, இந்த விபத்தில் மனித தவறு இருப்பதற்கான காரணியை மறுக்க முடியாது என ஐந்து பேரில் ஒருவர் தெரிவித்து உள்ளார். இது சுற்றுலா அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட 14 பக்க முதற்கட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“பிளைட் டேட்டா ரெக்கார்டரின் படி, என்ஜின்கள் தொடர்பான அனைத்து பதிவு செய்யப்பட்ட அளவுருக்களும் எந்த ஒழுங்கற்ற நிலையை காட்டவில்லை” என்று அறிக்கை கூறுகிறது.

ஏர் டிராஃபிக் கன்ட்ரோலர் 10:57 மணிக்கு தரையிறங்குவதற்கான அனுமதியை வழங்கியபோது, பைலட் ப்ளையிங் இன்ஜின்களில் இருந்து மின்சாரம் வரவில்லை என்று இரண்டு முறை குறிப்பிட்டது,” என்று அறிக்கை மேலும் கூறுகிறது.

விரிவான அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அதற்கு முன் என்ன நடந்தது என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடியாது” என்று விசாரணைக் குழு உறுப்பினர் ஒருவர் கூறினார்.

சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் படி, விபத்து அல்லது சம்பவத்தை விசாரிக்கும் மாநிலம் விபத்து நடந்த 30 நாட்களுக்குள் ஆரம்ப அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். விபத்து நடந்த 12 மாதங்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்.

முதற்கட்ட அறிக்கையின்படி, விமானக் குழுவினர் காலையில் காத்மாண்டு மற்றும் பொக்காரா இடையே இரண்டு விமான பயணங்களை மேற்கொண்டனர். விபத்துக்குள்ளான விமானம் அதே ஊழியர்களால் தொடர்ச்சியாக மூன்றாவது முறை இயக்கப்பட்டு உள்ளது.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் தரையிறங்க அனுமதி வழங்கியபோது, என்ஜின்களில் பவர் இல்லை என்று இரண்டு முறை கேப்டன் கதிவாடா குறிப்பிட்டார்.

சீனாவின் உதவியுடன் கட்டப்பட்ட இந்த விமான நிலையம், ஜனவரி 1ம் தேதி திட்ட காலக்கெடுவை சந்திக்கும் வகையில் போதிய ஆயத்தங்கள் இல்லாமல் அவசர அவசரமாக திறந்து வைக்கப்பட்டது. புதிய விமான நிலையத்தில் முக்கிய தேவையென கருதப்படும் உபகரணங்கள் இல்லை. விமானத்தை சோதிக்கும் கருவிகளும் இல்லை.

விமானம் தொடர்பான நடைமுறையும் வெளியிடப்படவில்லை. நிபுணர்களின் கூற்றுப்படி, விமான நிலைய நடைமுறைகள் மற்றும் தரவுகளைப் பற்றி விமான நிறுவனங்களுக்கு மிகக் குறைவான தகவல்களே உள்ளன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.