திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதியில் ரேஷன் கடை உள்ளது. இக்கடையில் 200க்கும் மேற்பட்டோர் தமிழக அரசு வழங்கும் அரிசி, பருப்பு, சக்கரை, எண்ணை, உள்ளிட்ட பெருட்களை வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் கடையில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக பிளாஸ்டிக் அரிசி விநியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இது தொடர்பான தகவல் பொதுமக்களிடையே வேகமாக பரவியதைத் தொடர்ந்து ஊர் மக்கள் அனைவரும் ரேஷன் கடையை முற்றுகையிட்டனர்.
காவல்துறை மற்றும் தாசில்தாருக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக கடைக்கு வந்த தாசில்தார் குமார், கடையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் அந்த ரேஷன் கடையில் அரிசி தரமானதாக வழங்கப்படுவதாகவும், பிளாஸ்டிக் அரிசி என பொதுமக்களிடம் தவறுதலாக வதந்தி பரப்பப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டினார். நல்ல அரிசியை பொதுமக்கள் யாரும் தவறான தகவலின் அடிப்படையில் நிராகரிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்ட தாசில்தார், பயப்படாமல் ரேஷன் அரிசியை வாங்கிச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.
தாசில்தாரின் சமாதானத்தைத் தொடர்ந்து ரேஷன் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். பிளாஸ்டிக் அரிசி விநியோகிக்கப்படுவதாக பரப்பப்பட்ட வதந்தி குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என தாசில்தார் அறிவித்துள்ளார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அண்மைக்காலமாகவே பிளாஸ்டிக் அரிசி என்ற வதந்தி பரவலாக பொதுமக்களிடம் பரப்பப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் பிளாஸ்டிக் அரிசி குறித்த வதந்தி பெருமளவு பரவியது. அப்போது தமிழக அரசு மற்றும் அதிகாரிகள் விளக்கம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.