ஜோர்ஹட்,அசாமின் பிரபல பஜாரில், நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ௩௦௦ கடைகள் எரிந்து சாம்பலாகின.
வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஜோர்ஹட் நகரின் மையப் பகுதியில், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட சவுக் பஜார் உள்ளது.
நேற்று முன்தினம் இரவு, அனைவரும் கடையை அடைத்து சென்றுவிட்ட நிலையில், திடீரென ஒரு கடையில் பிடித்த தீ, வேகமாக பல கடைகளுக்கும் பரவியது.
சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர், கடைவீதியின் குறுகலான சந்துகளில் புகுந்து தீயை அணைக்க சிரமப்பட்டனர்.
மொத்தம் ௫௦ தீயணைப்பு வீரர்கள், ௧௦ மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
‘இந்த தீ விபத்து மின் கசிவால் ஏற்பட்டுள்ளது. இதில், பலசரக்கு கடைகள், பாத்திரக் கடைகள், எழுதுபொருள் கடைகள், துணிக் கடைகள் என மொத்தம் ௩௦௦ கடைகள் எரிந்து நாசமாகின.
‘அதிர்ஷ்டவசமாக கடைகள் மூடிய பின் இச்சம்பவம் நடந்ததால், உயிர்ச் சேதம் எதுவும் இல்லை’ என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
‘ஏற்கனவே, கொரோனா தொற்று காலத்தில் பலத்த நஷ்டமடைந்தோம். தற்போது இந்த தீ விபத்து, எங்களை நடுத்தெருவுக்கு கொண்டுவந்து விட்டது. அரசு உடனடியாக உரிய நிவாரணம் அளிக்க வேண்டும்’ என, பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement