அடுத்தடுத்து காணாமல் போகும் தொழிலதிபர்கள்; சீனாவில் தொடரும் மர்மம்.!

முதலீட்டு வங்கியான சீனா மறுமலர்ச்சியின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவ் ஃபேன் திடிரென மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட முதலீட்டு வங்கி மற்றும் தனியார் பங்கு நிறுவனம் ஒரு அறிக்கையில் பாவோ ஃபேன்னைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறியது.

பாவோ கிடைக்காதது அல்லது குழுவின் வணிகம் அல்லது செயல்பாடுகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்பதைக் குறிக்கும் எந்த தகவலும் தன்னிடம் இல்லை என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. இந்தச் செய்தியைத் தொடர்ந்து நேற்று அந்நிறுவனத்தின் பங்குகள் 50 சதவீதம் சரிந்ததாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. 2021 இன் பிற்பகுதியில் நாட்டின் 60 டிரில்லியன் டாலர் நிதித் துறையை இலக்காகக் கொண்டு சீனாவின் ஊழல் எதிர்ப்பு விசாரணைக்கு மத்தியில் பாவோவின் திடீர் மாயம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக சீனாவின் முன்னணித் தொழில் நிறுவனமான `அலிபாபா’ நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா திடீரென காணாமல் போனார். கடந்த 2020ம் ஆண்டு, அக்டோபர் மாதம் வரை பொதுவெளியில் பல நிகழ்வுகளில் கலந்துகொண்ட ஜாக் மா, திடீரென மாயமானார். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேலாக எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை.

2020ம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில், “அலிபாபா நிறுவனத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் சீன அரசு சில கோட்பாடுகளை வகுத்திருக்கிறது. பழைமைவாதத்தை அரசு கைவிட வேண்டும்” என்று வெளிப்படையாகவே ஜி ஜின்பிங் அரசை விமர்சித்தார் ஜாக் மா. அதன் பிறகுதான் ஜாக் மா பொதுவெளியில் தோன்றவில்லை.

இதையடுத்து ஜாக் மாவை, சீன அரசுதான் கடத்தி வைத்திருப்பதாக சமூக ஊடகங்களில் விவாதங்கள் எழுந்தன. அவர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் பரவின. இந்த நிலையில் புதிய தொழில்முனைவோரைக் கண்டறியும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவராக இருந்துவந்த ஜாக் மா, அந்த நிகழ்ச்சியின் இறுதித் தொடரில் பங்குகொள்ளவில்லை. இந்தச் சம்பவத்தை அடுத்து `ஜாக் மாவை, சீன அரசுதான் சிறைப் பிடித்துவைத்திருக்கிறது’ என்பதை சீன மக்கள் நம்பத் தொடங்கினர்.

இந்த நிலையில், 2021 ஜனவரி மாதத்தில் காணொளி வாயிலாக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஜாக் மா. இந்த நிகழ்வில் ஆசிரியர்களுடன் ஜாக் மா நடத்திய கலந்துரையாடல்கள் குறித்த வீடியோக்கள் வெளியாகின. இருந்தும், அவர் எங்கிருக்கிறார் என்ற கேள்விக்கு விடை கிடைக்காமலேயே இருந்தது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மீண்டும் மாயமானார் ஜாக் மா. இந்தநிலையில் தற்போது பாவோ ஃபேன்னும் காணாமல் போயுள்ளது, சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.