சேலம், மேட்டூர் அருகே கோவிந்தம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. கடந்த இரு தினங்களுக்கு முன்பு ராஜா, தன்னுடைய நண்பர்கள் ரவி, இளையப்பெருமாள் ஆகியோருடன் மீன்பிடிக்க பாலாறு பாலம் அருகே சென்றபோது, கர்நாடக வனத்துறையினர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து, மூவரும் தண்ணீரில் குதித்து தப்ப முயன்றிருக்கின்றனர். ஆனால், ராஜா மட்டும் வீடு திரும்பாததால், அவரின் நண்பர்கள் இருவரிடமும் உறவினர்கள் விசாரித்ததில், `ராஜா-மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால், அவர் தண்ணீரில் விழுந்துவிட்டார்’ எனக் கூறியிருக்கின்றனர். அதையடுத்து, ராஜாவின் உறவினர்கள் இது தொடர்பாக கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்
புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார், ராஜாவைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கொங்கர்மட்டி மத்தே எனும் கர்நாடக எல்லைப்பகுதியில் பாலாற்றாங்கரை அருகே ராஜாவின் உடல் கிடந்து கண்டெடுக்கப்பட்டது. ராஜாவின் உடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அவர் மனைவி பவுனா, உறவினர்கள் ராஜாவின் உடலை வாங்க மறுத்திருந்தினர். இந்த நிலையில், இன்று காலை தமிழக முதல்வர் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட ராஜாவின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு நிதி அறிவித்தார்.
இருப்பினும் ராஜாவின் உறவினர்கள், `சம்பந்தப்பட்ட கர்நாடக வனத்துறையினர்மீது நடவடிக்கை எடுக்கும் வரையில், உடலை வாங்க மாட்டோம்’ எனக் கூறி வருகின்றனர்.
உயிரிழந்த ராஜாவின் மகன் ரவியிடம் பேசினோம். “அப்பா சாயங்காலம் ஒரு 5 மணி போலதான், மீன்பிடிக்கப் போவாறு. போயிட்டு மறுநாள் காலை இல்லனா சாயங்காலம்லா வீட்டுக்கு வந்துடுவாரு. அப்படித்தான் நேத்து முதல் நாளும் அப்பா மீன்பிடிக்கப் போறேன்னு போனார். அதுக்கு முன்னாடி எனக்கு பிடிச்ச மீன் குழம்ப அவரே செஞ்சுவச்சிட்டு, `சாப்பிடுடா… அப்பா வந்திடுரே’னு சொல்லிட்டுப் போனாரு. கடைசில நான் அப்பாவ போன்ல போட்டாவாதான் இறந்து போய் பார்க்க முடிஞ்சுது. எங்க அப்பாவ பிடிச்சு அடிச்சு துன்புறுத்திருக்காங்க.

அதுமட்டுமல்லாம அவங்களே அநியாயமா சுட்டுக் கொன்னு தண்ணீல தூக்கிப்போட்டுட்டு போயிருக்காங்க. எங்க அப்பாவுக்கு நடந்த மாதிரி இனி யாருக்கும் எதுவும் நடக்கக்கூடாது” என்றார் கண்ணீர் மல்க.