வாஷிங்டன்: அமெரிக்காவில் மிசிசிப்பி மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியாகினர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள டேட் கவுண்டியில் உள்ள அர்கபுட்லா அணை சாலையில் வெள்ளிக்கிழமை இரவு தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. அப்பகுதியில் கடையில் இருந்த நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் வீட்டில் இருந்த பெண் ஒருவர் கொல்லப்பட்டார்.அவரது கணவருக்கு இதில் காயம் ஏற்பட்டது. மொத்தம் 6 பேர் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டனர்.
துப்பாக்கிச் சூடு சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து விரைந்து வந்த போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர்.
இதுகுறித்து மிசிசிப்பி மாகாண கவர்னர் டேட் ரீவ்ஸ் கூறும்போது, “ துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் தனியாளாகத்தான் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டிருக்கிறார். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. உயிரிழந்தவர்களுக்கு என் பிரார்த்தனைகள்” என்று தெரிவித்தார்.
48 நாட்களில் 73 துப்பாக்கிச் சூடு சம்பங்கள்: இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, “போதும்.. இந்த வருடத்தின் 48 நாட்களில் இதுவரை 73 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துவிட்டன. பிரார்த்தனைகள் மட்டும் போதாது. துப்பாக்கி வன்முறை ஒரு தொற்றுநோய். நாடாளுமன்றம் இப்போது இதற்கு எதிராக செயல்பட்டே ஆக வேண்டும். நமக்கு தேவையானது துப்பாக்கி சட்டத்தில் திருத்தங்கள்” என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த ஆண்டில் (2022) மட்டும் துப்பாக்கி தொடர்பான வன்முறையில் 44,000 பேர் உயிரிழந்தனர்.