எனக்குத் திருமணமாகி ஆறு வருடங்கள் ஆகின்றன. எங்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. என் கணவர் தொழில் செய்து வருகிறார். நான் ஹோம் மேக்கர். மூன்று வருடங்களுக்கு முன், என் கணவர் புதிய தொழில் ஒன்றை தொடங்குவதற்கு லோனுக்கு முயன்றார். ஆனால் அதில் பல தடைகள் மற்றும் சிக்கல்கள். இந்நிலையில்தான், வங்கித் துறையில் பணிபுரியும் பெண் ஒருவர், என் கணவரின் நண்பர் மூலமாக கணவருக்கு அறிமுகமானார். அவர் அந்த லோனை பெறுவதற்கு எல்லா வகையிலும் உதவி செய்தார். இறுதியில் லோனும் கிடைத்தது. சொல்லப்போனால், அந்தப் பெண் இல்லை என்றால் அந்த லோன் என் கணவருக்குக் கிடைத்திருக்காது என்றுதான் சொல்ல வேண்டும்.

அலுவல் உதவியுடன் முடிந்துபோகவில்லை அந்தப் பெண்ணுடனான என் கணவரின் பழக்கம். இருவரும் நண்பர்கள் ஆகினர். அப்போதெல்லாம் என் கணவர் என்னிடம் அனைத்தையும் பகிர்வார் என்பதால், ‘அது ரொம்ப நல்ல பொண்ணு. எனக்கு ஒரு நல்ல ஃப்ரெண்டாவும் கிடைச்சிருக்கு’ என்று சொல்லி அந்தப் பெண்ணை எனக்கு அறிமுகப்படுத்தியதுடன், ஃபேமிலி ஃப்ரெண்ட் ஆகவும் அவரை ஆக்கிக்கொண்டோம். எங்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு அவரை முதன்மையாக வரவேற்பது, அந்தப் பெண்ணும் தன் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு எங்கள் குடும்பத்துக்கு முதல் முக்கியத்துவம் கொடுப்பது என்று இருந்தோம்.
அந்தப் பெண்ணுக்கு இன்னும் திருமணமாகவில்லை. எனவே, ஒரு சகோதரிபோல அவரை நான் நினைத்தேன். ஆனால், ஒரு கட்டத்தில் அவருக்கும் என் கணவருக்கும் நட்பு என்பதையும் தாண்டி ஓர் ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்தது. காரணம், அந்தப் பெண்ணை சந்தித்தாலோ, அவர் போன் பேசினாலோ என்னிடம் பகிர்ந்துகொள்ளும் கணவர், வெகு நாள்களாக அவரை பற்றி பேசவே இல்லை. அவர் ஏதோ என்னிடமிருந்து மறைக்கிறார் என்று தோன்ற ஆரம்பித்தது. அதேபோல, அந்தப் பெண் அவ்வப்போது என்னிடம் போன் செய்து பேசுவது, வீட்டுக்கு வந்து குழந்தையை பார்ப்பது போன்றவற்றையும் நிறுத்திவிட்டார்.

ஆரம்பத்தில் நான் கணவருக்கும் அவர் தோழிக்கும் இடையில் ஏதோ கருத்து வேறுபாடு என்று நினைத்தேன். அதனால்தான் இருவரும் முன்னர் போல பேசிக்கோள்ளவில்லையோ என்று, இது பற்றி என் கணவரிடமே கூட கேட்டேன். ‘என்னங்க… இப்போயெல்லாம் நீங்க அந்தப் பொண்ணை பார்த்து எதுவுமே சொல்றதில்ல… ஏதாச்சும் மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்கா உங்களுக்குள்ள?’ என்று. ‘அதெல்லாம் இல்ல. எனக்கு பிசினஸ்ல ஆயிரம் வேலை, அவளுக்கும் வேலையில ஆயிரம் டென்ஷன். இதுல ஃப்ரெண்ஷிப்க்கு எல்லாம் எங்க டைம் இருக்கு’ என்றார்.
சமீபத்தில் ஒரு நாள், என் கணவர் அலுவலகம் சென்ற பின்னர் என் தோழியை சந்திக்கச் சென்றேன். அது ஒரு திடீர் சந்திப்பு என்பதால் நான் செல்வது என் கணவருக்குத் தெரியாது. நாங்கள் சந்தித்த ஆடையகத்தின் அருகே என் கணவரின் கார் நின்றதை பார்த்தேன். இவர் இங்குதான் இருக்கிறாரா என்று நான் அவருக்கு போன் செய்ய மொபைலை எடுத்த நேரம், என் கணவரும், அவர் தோழியும் கார் நோக்கி வர, நான் போன் செய்யவில்லை. இருவரும் காரில் ஏறிச் சென்றனர்.

எனக்கு சந்தேகம் ஏற்பட, நான் என் கணவருக்கு போன் செய்து, அவர் அலுவலகம் பக்கமாக ஒரு வேலையாக வந்ததாகக் கூறி, அலுவலகம் வருவதாகக் கூறினேன். அவர், தான் ஒரு க்ளையன்ட்டை பார்க்க வெளியே சென்றிருப்பதாகவும், சந்திப்பு முடிய இரவாகிவிடும் என்றும், என்னை வீட்டுக்குச் செல்லும்படியும் கூறினார். நான் நேராக அந்தப் பெண் பணிபுரியும் வங்கிக்குச் சென்றேன். நேரடியாக அந்தப் பெண் பெயரை கூறி விசாரிக்காமல், அவர் டெசிக்னேஷனை சொல்லிக் கேட்க, அவர் அன்று லீவ் என்று வங்கியில் சொன்னார்கள். இரவு வீடு திரும்பிய கணவர், தன் தோழியை சந்தித்தது பற்றி என்னிடம் எதுவுமே கூறவில்லை.
அன்று விழுந்தது சந்தேகத்தின் விதை. அதிலிருந்து, அவர் போனுக்கு செகண்ட் லைன் செல்லும்போது, அவர் மொபைலுக்கு லாக் போட்டிருப்பதை பார்க்கும்போது, விடுமுறை நாள்களில் அவர் வெளியே கிளம்பிச் செல்லும்போது, நான் கேட்கும் கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாக பதில் சொல்லும்போது என… என் சந்தேகம் வலுப்பட்டுக்கொண்டே வருகிறது.

ஒருவேளை நான் அன்று காரில் அவர்களை கண்டது அவர்களது எதிர்பாராத சந்திப்பாகவும், என் கணவர் உண்மையாகவே ஒரு க்ளையன்ட்டை பார்க்கவும், அந்தப் பெண் தன் பெர்சனல் காரணத்துக்காகவும் விடுப்பு எடுத்திருக்கலாம். அவரை சந்தித்ததை என்னிடம் கணவர் சொல்ல மறந்திருக்கலாம். அல்லது சொல்லத்தக்க அளவுக்கு அது முக்கியமில்லாதது என்று நினைத்திருக்கலாம். நான்தான் சந்தேகக் கண் கொண்டு பார்க்கிறேனோ என்று தோணுகிறது. இன்னொரு பக்கம், என் உள்ளுணர்வை என்னால் புறம்தள்ளவும் முடியவில்லை. என்ன செய்வது நான்?