டேராடூன்: உத்தரகாண்டில் தெருநாயை வீட்டுக்கு பிடித்து வந்ததை ஏற்காத மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். உத்தரகாண்ட் மாநிலம் பாஜ்பூர் பகுதியை சேர்ந்த சூரஜ் சைனி – ஊர்மிளா தம்பதியினர் வசிக்கின்றனர். இந்த நிலையில் தெருவில் சுற்றித் திரிந்த ஆதரவற்ற நாய் ஒன்றை பிடித்துக் கொண்டு தனது வீட்டிற்கு சூரஜ் சைனி வந்தார்.
ஆனால் வீட்டில் நாயை வளர்ப்பதில் அவரது மனைவி ஊர்மிளாவுக்கு விருப்பம் இல்லை. இதனால் தம்பதியினரிடையே பலமுறை வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் நாய்க்குட்டியை மீண்டும் தெருவில் கொண்டு போய் விட்டுவிடும்படி தனது கணவரிடம் ஊர்மிளா கூறினார். ஆனால் சூரஜ் சைனி மறுத்தார். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த ஊர்மிளா, தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார் ஊர்மிளாவின் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். இறந்த ஊர்மிளாவின் சகோதரர் தினேஷ் போலீசில் அளித்த புகாரில், ‘வரதட்சணை கொடுமையால் எனது சகோதரியை சூரஜ் சைனி கொலை செய்துள்ளார்.
அதனால் சூரஜ் சைனி, அவரது தாய் உள்ளிட்ட ஐந்து பேரையும் கைது செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாஜ்பூர் இன்ஸ்பெக்டர் பிரவீன் சிங் கோஷ்யாரி கூறுகையில், ‘தெருநாயை வளர்ப்பதில் ஏற்பட்ட பிரச்னையால் ஊர்மிளா தற்கொலை செய்துள்ளார். மற்றபடி வரதட்சணை கொலையா? என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். இவ்விகாரத்தில் சிலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.