ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் அஸ்வின், ஜடேஜா சாதனை..!

புதுடெல்லி,

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ‘பார்டர்-கவாஸ்கர்’ கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூரில் நடந்த தொடக்க டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

* டெல்லி டெஸ்டில் முதல் இன்னிங்சில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் 3 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவரது ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 100 ஆக (20 டெஸ்ட்) உயர்ந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100 விக்கெட் சாய்த்த 2-வது இந்தியர் என்ற சிறப்பை பெற்றார். இந்த வகையில் இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கும்பிளே 111 விக்கெட்டுகளுடன் (20 டெஸ்ட்) முதலிடம் வகிக்கிறார்.

* இந்திய ஆல்-ரவுண்டர் ஜடேஜா 3 விக்கெட் கைப்பற்றினார். அவர் இதுவரை 62 டெஸ்டில் ஆடி 252 விக்கெட் மற்றும் 2,593 ரன்கள் எடுத்துள்ளார். இதையடுத்து டெஸ்டில் 250 விக்கெட் மற்றும் 2,500 ரன் இவற்றை அதிவேகமாக எட்டிய முதல் இந்தியர், உலக அளவில் 2-வது வீரர் என்ற சாதனையை ஜடேஜா படைத்தார். இந்த மைல்கல்லை இங்கிலாந்தின் இயான் போத்தம் 55 டெஸ்டுகளில் அடைந்து முதலிடத்தில் உள்ளார்.

இந்திய வீரர் புஜாராவுக்கு இது 100-வது டெஸ்ட் போட்டியாகும். இந்த மைல்கல்லை எட்டிய 13-வது இந்தியர் ஆவார். போட்டி தொடங்குவதற்கு முன்பாக மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு 100 என்று எழுதப்பட்ட சிறப்பு தொப்பியை நினைவுப்பரிசாக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வழங்கி பாராட்டினார். அப்போது கவாஸ்கர் ‘100 டெஸ்டுகளில் ஆடிய வீரர்களின் பட்டியலில் இணையும் புஜாராவை வரவேற்கிறேன். 100-வது டெஸ்டில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்காக பிரார்த்திக்கிறேன்’ என்றார். பின்னர் புஜாரா களம் இறங்கிய போது இந்திய வீரர்கள் இருபுறமும் வரிசையாக நின்று கைதட்டி உற்சாகப்படுத்தினர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.