இடுபொருட்களை வாங்கினால்தான் யூரியா விற்பனை என நிபந்தனை: உர நிறுவனங்களின் செயல்பாட்டால் விவசாயிகளுக்கு கூடுதல் சுமை

திண்டுக்கல்: விவசாயத்திற்கு அத்தியாவசிய தேவையான யூரியா வாங்க வரும் விவசாயிகளிடம் கூடுதலாக தேவையற்ற உரம், விதைகளை வாங்க வற்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது. தனியார் பெரும் நிறுவனங்கள் தரும் நெருக்கடியே இந்த நிர்பந்தத்திற்கு காரணம் என வியாபாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழ்நாட்டில் இந்த சீசனுக்கு ஏற்ப நெல், மக்காசோளம், நிலக்கடலை, சோளம் என விவசாயிகள் பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

தற்போது மழை குறைந்து வெயில் காலம் தொடங்கியுள்ளதால் மக்காசோளம், நெல் ஆகியவற்றை அதிக அளவில் பயிரிட தொடங்கியுள்ளனர். ஆனால் இதற்காக யூரியா வாங்க கடைகளுக்கு செல்லும் விவசாயிகள் அவர்களது கட்டுப்பாடுகளை கேட்டு கலங்கி போகின்றனர். அதாவது, யூரியா வாங்க செல்லும் விவசாயிகளிடம் கூடுதலாக அதே நிறுவனத்தின் தயாரிப்பிலான உர வகைகள் அல்லது விதை வகைகளை வாங்க வற்புறுத்துவதாக கூறப்படுகிறது. உரம் வாங்குவதற்கு மட்டுமே பணம் எடுத்து செல்லும் விவசாயிகள் கூடுதல் பொருட்களை வாங்க நிர்பந்திப்பதால் பணமின்றி தவிக்கும் நிலை உருவாகிறது.

உரத்திற்கு பெயர்போன ஸ்பெக் நிறுவனம் உரம் விலைகளை இருமடங்கு உயர்த்திவிற்பதாகவும் டிஏபி உரத்துடன் தேவையற்றவைகளையும் வாங்க நிர்பந்திக்க படுவதால் சாகுபடி செலவு அதிகரிப்பதாகவும் ஏழை விவசாயிகள் குமுறுகின்றனர். அதே சமயம் தாங்கள் கொள்முதல் செய்யும் தனியார் பெருநிறுவனங்களின் நிர்பந்தமே இதற்கு காரணம் என வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

கூடுதல் பொருட்களை வாங்க மறுத்து விவசாயிகள் பலர் செல்வதால் பல லட்சமதிப்பிலான உரங்கள் கடைகளிலேயே தேங்கி கிடப்பதாக வியாபாரிகள் புலம்புகின்றனர். தனியார் நிறுவனங்களால் தேவையற்ற சுமைக்கு உட்படுத்த படுவதை ஒன்றிய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதாக குறைகூறும் விவசாயிகள். தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.