
இந்தியாவில் சிறுத்தைப்புலிகள் கடந்த 1952-ம் ஆண்டு முற்றிலுமாக அழிந்துவிட்டதாக அப்போதைய நேரு அரசாங்கம் அறிவித்தது. இந்நிலையில் ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவில் மீண்டும் சிறுத்தைகள் கொண்டுவர திட்டமிடப்பட்டது. இதற்காக தென்னாப்பிரிக்காவுடன் ஒப்பந்தமும் போடப்பட்டது. ஒப்பந்தத்தையடுத்து தென்னாப்பிரிக்காவிலிருந்து நிபுணர்கள் குழு ஒன்று கடந்த ஜூன் மாதம் இந்தியாவின் குனோ பூங்காவுக்கு வந்து ஆய்வு நடத்தியது.
ஆய்வின் முடிவுகள் திருப்திகரமாக இருந்த நிலையில், தென்னாப்பிரிக்காவில் இருந்து 8 சிறுத்தைகள் இந்தியா வந்து சேர்ந்தன. இந்த சிறுத்தைகளை அதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருந்த குனோ தேசிய பூங்காவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதியன்று பிரதமர் மோடி தனது 72வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக திறந்து வைத்தார்.
இந்த சிறுத்தைகள் வாரத்திற்கு 3 முதல் 4 நாட்கள் வரை வேட்டையாடி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறது. இந்திய மண் மற்றும் காலநிலையை நன்கு புரிந்துக்கொண்டு அதற்கேற்றார் போல வாழ பழகிக்கொண்டது. இப்படி இருக்கையில் அடுத்த பேட்ஜ்ஜாக 12 சிறுத்தைகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா கொண்டுவர இந்திய விமானப்படையின் சி-17 ரக விமானம் கடந்த 16-ம் தேதி அந்நாட்டிற்கு சென்றது.
இந்த நிலையில் தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க்கில் இருந்து 12 சிறுத்தைப்புலிகளை ஏற்றிக் கொண்டு வந்த இந்திய விமான படையின் சி-17 ரக விமானம் இன்று காலை 10 மணிக்கு மத்திய பிரதேசத்தின் குவாலியர் விமானப்படை தளத்தில் தரை இறங்கியது. 2-வது கட்டமாக கொண்டு வரப்பட்டுள்ள சிறுத்தைப்புலிகளில் 7 ஆண்கள், 5 பெண்கள் ஆகும். அவைகள் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலம் குனோ தேசிய பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு சிறுத்தைப் புலிகளை மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், ஒன்றிய அமைச்சர் பூபேந்தர் யாதவ் ஆகியோர் கூண்டில் இருந்து திறந்து விட்டனர். புதிதாக 12 சிறுத்தைப் புலிகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து அவைகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.