ஈரோடு கிழக்கு: வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி!

இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னங்களை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணி ஈரோடு மாநகராட்சி கூட்ட அரங்கில் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் முன்னிலையில் தொடங்கியது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான பிரச்சாரங்களில் அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ள நிலையில் தேர்தலுக்கான தயாரிப்பு பணிகளில் தேர்தல் ஆணைய அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மார்ச் 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும்.

வாக்குப் பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி!

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னங்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணி தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் மாவட்ட தேர்தல் அதிகாரி மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தேர்தல் நடத்தும் அலுவலர் மாநகராட்சி ஆணையர் சிவகுமார் ஆகியோர் முன்னிலையில் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தொடங்கியது.

78 பொத்தான்கள்!

பிப்ரவரி 27ஆம் தேதி 52 வாக்குப்பதிவு மையங்களில் 238 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர், சுயேச்சை உட்பட 77 வேட்பாளர்கள், நோட்டா என 78 பேர் போட்டியிடுகின்றனர்.

எப்போது நிறைவடையும்?

ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் ஒரு கட்டுப்பாட்டு கருவி ஒரு VV PAT இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படவுள்ள1430 வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது. இன்று தொடங்கி மூன்று நாட்களுக்குள் இந்த பணி நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.