விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூர் கிராமத்தில் இயங்கி வந்த அன்புஜோதி ஆசிரமத்தில் தங்கி இருந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அந்த ஆசிரமத்தில் தங்கியிருந்த பலர் காணாமல் போய் இருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ஆசிரமத்தை நிர்வாகிகளான ஜூபின் மற்றும் அவருடைய மனைவி மரியா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வந்த அன்புஜோதி ஆசிரமத்தில் தங்கி இருந்த பெண்களுக்கு பாலியல் ரீதியில் தொந்தரவுகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆசிரமத்தில் காணாமல் போனவர்களிடமிருந்து உடல் உறுப்புகள் திருட்டு நடைபெற்று இருக்க வாய்ப்புள்ளது. இந்த வழக்கை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய மூன்று மாநில அதிகாரிகளைக் கொண்ட சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.