ஆண்டிபட்டி: தேனி பகுதியில் சாலையோர கடைகளில் சுகாதாரமின்றி விற்கப்படும் பழங்களை பொதுமக்கள் வாங்கி உண்பதால் தொற்றுநோய் பரவும் ஆபத்து உள்ளது. தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உள்ளதால் தேனி மாவட்டம், மலைகள் சூழ்ந்து பசுமையாகவும், சில்லென்ற சீதோஷ்ண நிலையும் இருப்பதன் காரணமாக பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும். தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் இயற்கை பூமியின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. இங்குள்ள தேவதானப்பட்டி, கம்பம், வருசநாடு, பெரியகுளம் போன்ற பகுதிகள் மலையும், மழையும் சார்ந்த இடம் என்று கூட கூறலாம். அந்தளவுக்கு சிலிர்க்க வைக்கும் சிகரங்கள், தேடி வந்து கொட்டும் மழைச்சாரல் என இயற்கை வளம் இங்கு கொட்டிக் கிடக்கிறது.
தேனி மாவட்டத்தில் 30 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளதால், விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விளங்குகிறது. மேலும் மேற்குத்தொடர்ச்சி மலையின் வரிசையில் ஏலம், மிளகு, காபி, ஆரஞ்சு, மா, சப்போட்டா, கொய்யா, இலவு விவசாயம் நடக்கிறது. தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் தள்ளுவண்டி கடைகள் அமைத்து பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். இங்கு பப்பாளி, கொய்யா, அண்ணாச்சி, தர்ப்பூசணி, திராட்சை, ஆப்பிள் பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
வியாபாரிகள் கையில் உறை அணியாமல் சுகாதாரமின்ற பழங்களை அறுத்து விற்கின்றனர். இந்த பழங்களை வாங்கி உண்ணுவதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் ஆபத்து உள்ளது. பனிப்பொழிவால் வைரஸ் காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனையில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில், தேனி பகுதியில் பழங்கள் சுகாதாரமற்ற முறையில் விற்கப்படுவதால் தொற்றுநோய் வேகமாக பரவ வாய்ப்புள்ளது. தேனி பகுதியில் கலப்பட உணவு பொருட்கள், செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள், கெட்டுப்போன பழங்கள் விற்பனை அதிகரித்து வருகிறது.
தேனி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், ஓட்டல் மற்றும் சாலையோரம் விற்கப்படும் உணவு பொருட்களின் தரத்தை ஆய்வு ெசய்யும் பணியை துரிதப்படுத்த வேண்டும். இதனை குழந்தைகள், பெரியவர்கள் என யார் வாங்கி உண்டாலும் உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதுபோல் ஃபார்மலின் தடவிய மீன்கள் தேனி பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது. பார்மலின் தடவிய மீன்களை பார்த்த உடன் கண்டுபிடிக்க முடியாது. ஆய்வின் மூலமே கண்டுபிடிக்க முடியும். பார்மலின் தடவிய மீன்கள் மீது ஈக்கள் உட்காராது.
இதனால், மீனின் கண்கள் நன்றாக உள்ளனவா, செவில் சிவப்பாக உள்ளதா, உடல் உறுதித்தன்மையுடன் இருக்கிறதா என்று பார்த்து, மீன்களின் மீது ஈக்கள் உட்காருகிறதா என்பதையும் பார்த்து வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மீன் கடைகளில் மீன் வளர்ச்சித் துறை அலுவலர், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சோதனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. அதுபோல் தேனியின் பல்வேறு இடங்களில் பாஸ்புட், சிக்கன் உணவகங்கள் செயல்படுகிறது. இந்த உணவகங்களில் சுகாதாரமற்ற முறையிலும் தரமற்ற எண்ணெய் உள்ளிட்ட பொருட்களால் உணவுகள் தயார் செய்கின்றன. இந்த உணவுகளை அதிக அளவில் பள்ளி மாணவர்களும், தினகூலி தொழிலாளர்கள் வாங்கி சாப்பிடுகின்றனர்.
இதனால் ஏற்படும் உடல் தீமைகளை மக்கள் அறியாமல் உள்ளனர். எனவே, இப்பகுதியில் உள்ள பாஸ்ட் புட் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் முறையாக ஆய்வு ெசய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பள்ளி அருகே உள்ள கடைகள், தெருவோர கடைகளில் சுகாதாரமற்ற திண்பண்டங்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முன்பு பெட்டிகடைகளில் நெல்லிக்காய், கொய்யா, நாவல் பழம், இலந்தை பழம், பனங்கிழங்கு, பணியாரம், கடலை மிட்டாய் என ஏதாவது ஒரு வகையில் சத்தான, தரமான திண்பண்டங்கள் விற்கப்படும்.
இதை மாணவர்கள் வாங்கி சாப்பிட்டு உடல்நலத்தோடு இருந்தனர். இன்று கடைகளில் தரமற்ற சாக்லேட், பாக்கெட் ஜூஸ், காலாவதியான திண்பண்டங்களே அதிகளவில் விற்கப்படுகிறது. கிராமங்களில் போலி திண்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதுபோன்ற போலி மற்றும் சுகாதாரமற்ற திண்பண்டங்களை சாப்பிடும் மாணவர்கள் வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் உட்பட பல நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சுகாதாரமற்ற பொருட்கள் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பார்மலின் ஒரு நிறமற்ற வேதிப் பொருள். இது மருத்துவத்துறையில் கிருமிநாசினியாகவும் பதப்படுத்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது. பார்மலின் கலந்த நீரில் மாமிசம் அல்லது தாவரம் எதைப்போட்டு வைத்தாலும் அது கெடாமல் அப்படியே இருக்கும். ஆழ்கடலில் மீன் பிடிப்பவர்களில் சிலர் தங்கள் மீன்கள் வெகு நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்க ஃபார்மலின் என்ற ரசாயனத்தைப் பயன்படுத்துகின்றனர், இதனால் 15 நாட்கள் அல்லது அதற்கும் மேல் கூட மீன்கள் கெடாமல் இருக்கின்றன. இதை உணவில் தொடர்ந்து பயன்படுத்தும்போது மிகக்குறுகிய காலக்கட்டத்தில் குமட்டல், மயக்கம், மூக்கு, கண் மற்றும் தொண்டையில் எரிச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
மீனில் இருந்து பார்மலினை வெளியேற்ற அதனை குளிர்ந்த நீரில் குறைந்தது ஒருமணி நேரமாவது ஊற வைக்க வேண்டும். இந்த வழியில் மீனை சுத்தம் செய்வது மீனில் இருந்து 61 சதவீதம் பார்மலினை வெளியேற்றுகிறது. இதைவிட சிறந்த வழி மீனை சமைப்பதற்கு முன் 1 மணி நேரம் உப்புநீரில் ஊற வைக்க வேண்டும். அது மீனில் இருக்கும் 90 சதவீத பார்மலினை வெளியேற்றுகிறது’’ என்றார். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘‘நவீன வரவான பாஸ்புட் உணவு வகைகளை இன்றைய இளம் தலைமுறையினர் பெரிதும் விரும்பி உண்ணுகின்றனர்.
இந்த உணவுகளை சாப்பிடுவதால் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. இளம் தலைமுறையினர் தொடர்ந்து பாஸ்புட் உணவு வகை சாப்பிட்டு வருவதால் 50 வயது வரும் போது கேன்சர் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படலாம். எனவே, பாஸ்புட் (ஜங்புட்) உணவு வகைகளை தவிர்த்து விட்டு இயற்கையான காய்கறி வகைகளை உண்ண வேண்டும், என்றனர். கலப்பட உணவு பொருட்கள், செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள், கெட்டுப்போன பழங்கள் விற்பனை அதிகரித்து வருகிறது.