என்ன மனுசன்யா! சொன்னப்படியே ரசிகர்களுக்காக விஜய் தேவரகொண்டா செய்த செயல்

நடிகர் விஜய் தேவரகொண்டா, அனைத்து பயணச் செலவுகளையும் சொந்தமாக செய்து, தனது ரசிகர்கள் 100 பேரை தேர்ந்தெடுத்து மணாலிக்கு சுற்றுலா அனுப்ப உள்ளதாக தெரிவித்த நிலையில், தற்போது சொன்னப்படி செய்துள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா, ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தனது ரசிகர்களை ஏதாவது ஒரு வகையில் மகிழ்விக்கும் வழக்கத்தை வைத்திருக்கிறார். Deverasanta என்றப் பெயரில் கடந்த 5 ஆண்டுகளாக இதனை அவர் செய்து வருகிறார். அதன்படி, இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்படும் 100 ரசிகர்களை தனது முழுச் செலவில் சுற்றுலாவுக்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும், சுற்றுலாவுக்கான இடம் ஏற்றது எது என்று தேர்வு செய்ய தனக்கு உதவுமாறும் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்தப் பதிவின் கீழ் இந்திய மலைப் பகுதிகள், இந்திய கடற்கரைப் பகுதிகள், இந்திய கலாச்சார சுற்றுலாப் பகுதிகள், இந்திய பாலைவனம் ஆகிய நான்கு பொதுவான இடங்களையும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இதில் பெரும்பாலான ரசிகர்கள் 42.5 சதவிகிதம் பேர் இந்திய மலைப்பகுதியை தேர்வு செய்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 8-ம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் விஜய் தேவரகொண்டா பதிவிட்டிருந்ததாவது, “அன்பானவர்களே, புத்தாண்டு வாழ்த்துக்கள், இதோ DevaraSanta அப்டேட் வந்துருச்சு. உங்களில் 100 பேரை தேர்ந்தெடுத்து, அனைத்து செலவுகளையும் செய்து விடுமுறைக்கு அனுப்பப் போகிறேன் என்று சொன்னேன். உணவு, பயணம், தங்குமிடம் ஆகிய மூன்றும் என்னுடைய செலவு என்று கூறியிருந்தேன். நீங்கள் எங்கு செல்ல விரும்புகிறீர்கள் என்றும் கேட்டிருந்தேன். மலைப்பகுதி செல்ல இருப்பதாக பெரும்பாலோனர் தெரிவித்து இருந்தீர்கள்.

அதனால் மலைப் பகுதிக்கு செல்லப்போகிறோம். தற்போது உங்களில் 100 பேரை ஐந்து நாள் பயணமாக மணாலிக்கு அழைத்துச் செல்ல உள்ளேன். பனி மூடிய மலைகளைப் பார்க்கப் போகிறீர்கள், அங்குள்ள கோயில்கள், மடங்கள் ஆகியவற்றைப் பார்க்கப் போகிறீர்கள், மேலும் நாம் இணைந்து நிறைய நிகழ்ச்சிகளை செய்யப்போகிறோம். 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், சமூகவலைத்தளத்தில் என்னைப் பின்தொடர்பவர்களாகவும் நீங்கள் இருந்தால் செய்ய வேண்டியது இதுதான்.

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள DevaraSanta கூகுள் விண்ணப்பப் படிவத்தை நிரப்பினால் போதும், நாங்கள் உங்களில் 100 பேரைத் தேர்ந்தெடுத்து இந்த அற்புதமான விடுமுறைக்கு அனுப்புவோம். உங்கள் பயணத்தின் ஒரு பகுதியாக நானும் இருக்க விரும்புகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சொன்னப்படியே தனது ரசிகர்கள் 100 பேரை மணாலிக்கு அழைத்துச் சென்றுள்ளார். தேர்வான ரசிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ள விஜய தேவரகொண்டா, ரசிகர்கள் விமானத்தில் ஜாலியாக செல்லும் வீடியோவையும், அவர்கள் தங்குவதற்கு ஆடம்பரமான ஓட்டல் விடுதியை பதிவுசெய்துள்ள புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இதையடுத்து நெட்டிசன்கள், இந்த முறை நாங்கள் மிஸ் செய்துவிட்டோம், அடுத்தமுறை முயற்சி செய்கிறோம் என்றும், வாழ்த்துகள் அண்ணா என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.