ஐ.எஃப்.எஸ். நிறுவனம் மோசடி: பிடிவாரன்ட் பிறப்பித்த நீதிமன்றம்!

அதிக வட்டி தருவதாக கூறி 56 கோடியே 82 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், ஐ.எஃப்.எஸ். நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், நிர்வாகிகள் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்து சென்னை நிதிநிதிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிக வட்டி தருவதாக மோசடி!

வேலூர் மாவட்டம், காட்பாடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த இன்டர்நேஷனல் ஃபைனான்சியல் சர்வீஸ் எனும் ஐ.எஃப்.எஸ். நிறுவனம், முதலீடு செய்யும் தொகைக்கு, 10 முதல் 25 சதவீதம் வரை மாதந்தோறும் வட்டி தருவதாகக்கூறி, 6 ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

ஐ.எஃப்.எஸ் மீது 200 பேர் புகார்!

இதுதொடர்பாக, 200 முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், 56 கோடியே 82 லட்சத்து 89 ஆயிரத்து 879 ரூபாய் மோசடி செய்ததாக, ஐ.எஃப்.எஸ் மார்க் ஆப்பர்சூனிட்டி டெவலப்மென்ட் லிமிடெட் உள்பட ஆறு நிறுவனங்கள் மற்றும் இயக்குனர்கள், நிர்வாகிகள், ஊழியர்களுக்கு எதிராக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கைது படலம்!

வழக்கு தொடர்பாக, நிறுவன இயக்குனர் மோகன்பாபு, நிர்வாகிகள் சரவணகுமார், குப்புராஜ், ஜெகனநாதன் உள்ளிட்ட 13 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவு!

சென்னையில் உள்ள நிதிநிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று பேர் மட்டும் ஆஜராகினர். 10 பேர் ஆஜராகவில்லை. இவர்களை கைது செய்து பிப்ரவரி 28ஆம் தேதி ஆஜர்படுத்தும்படி வழக்கின் புலன் விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.