ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் சொகுசு காரில் வைத்து எரிக்கப்பட்ட இருவரின் கருகிய உடல்களை, போலீசார் நேற்று மீட்டனர். இவர்களை பசு காவலர்கள் கடத்தினர் என்று குற்றஞ்சாட்டப்படும் நிலையில், ஆறு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, பரத்பூர் மாவட்டத்தில் உள்ள பிவானியில், சொகுசு கார் ஒன்று எரிந்த நிலையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், காரில் இருந்து கருகிய நிலையில் இரு உடல்களை மீட்டனர்.
விசாரணையில், இவர்கள் காட்மீகா கிராமத்தைச் சேர்ந்த நசிர், ௨௫ மற்றும் ஜுனைத், ௩௫, என தெரியவந்தது. இவர்களது குடும்பத்தினர் அளித்த புகாரில், ‘பஜ்ரங் தள அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடத்திச் சென்றனர்’ என குறிப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து, போலீசார் இந்த அமைப்பைச் சேர்ந்த ஆறு பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
”இந்த சம்பவத்தில் இவர்களுக்கு தொடர்பிருக்கிறதா என்பது விசாரணைக்குப் பின்னரே தெரியவரும். இறந்த இருவரில், ஜுனைத் மீது பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் பசு கடத்தல் சம்பந்தமாக ஐந்து வழக்குகள் உள்ளன.
”பிடிபட்டவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,” என, போலீஸ் ஐ.ஜி., கவுரவ் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் அசோக் கெலாட், ”குற்றவாளிகளை விரைவாகப் பிடித்து, கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன்,” என தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement