குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று தமிழ்நாடு வருகை… முழு விவரம் இதோ!

President Droupathi Murmu In Tamilnadu: தமிழ்நாட்டில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, இன்றும் (பிப். 18), நாளையும் (பிப். 19) இரண்டு நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மதுரை, கோவை, நீலகிரி என பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார். 

டெல்லியில் இருந்து இன்று காலை 8.55 மணிக்கு விமானப்படை விமானம் மூலமாக புறப்படும் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, காலை 12 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வருகை தருவார். பின்னர், அங்கிருந்து மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

அன்னதான நிகழ்ச்சியில் பங்கேற்பு

அதன் தொடர்ச்சியாக கோயிலில் நடைபெறும் அன்னதான நிகழ்ச்சியிலும் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வருகை தரவுள்ள நிலையில் கோவிலை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி 8 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு ஒரு கோபுரத்தில் இரண்டு காவலர்கள் என கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் குடியரசுத்தலைவரின் வருகையையொட்டி கோயிலுக்கு வந்தவுடன் தற்காலிக வரவேற்பரை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் குடியரசு தலைவரின் வருகையையொட்டி கோயிலை சுற்றியுள்ள ஆடி வீதிகளில் சாலையோர கடைகள் அமைக்கக்கூடாது என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள தங்கு விடுதிகளில் தங்கியுள்ளவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டது.

மதுரை டூ கோவை 

மதுரையில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு,  கோவை ஈசா யோகா மையத்தில் இன்று நடைபெறும் சிவராத்திரி விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொள்கிறார். இதற்காக, அவர் மதியம் 2 மணியளவில் மதுரையில் இருந்து புறப்பட்டு, மதியம் 3 மணியளவில் விமான நிலையத்திற்கு வருகை தருவார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு ஆளுநர், ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்பு அளிக்கின்றனர். 

விமான நிலையத்தில் இருந்து அரசு விருந்தினர் மாளிகைக்கு கார் மூலம் செல்லும் குடியரசு தலைவர், அங்கு ஓய்வெடுத்துவிட்டு மாலை 5 மணியளவில் ஈஷோ யோகா மையத்திற்கு கார் மூலம் புறப்படுகிறார். மாலை 5.45 மணிக்கு செல்லும் குடியரசு தலைவர் அங்கும் தரிசனம் மேற்கொள்கிறார். 

சிவராத்திரி விழா

கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் இருக்கும் இஷா யோகா மையத்தில், 112 அடி உயர ஆதியோகி சிவன் உள்ளது. அங்கு ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது. எனவே, ஆதியோகி சிலை வளாகத்திற்கு இன்று மாலை வருகை தரும் குடியரசு தலைவர், அங்கு நடைபெறும் சிவராத்திரி விழாவில் கலந்துகொள்கிறார். பின்னர், இரவு 8.30 மணியளவில் கார் மூலம் விருந்தினர் மாளிகைக்கு செல்லும் அவர், இன்று இரவு அங்கு ஓய்வெடுக்க உள்ளார்.

வெல்லிங்டன் நிகழ்ச்சி

பின்னர், நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் வெல்லிங்டன் ராணுவப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்ள நாளை காலை கோவை விமான நிலையத்தில் இருந்து, விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் வெல்லிங்டன் ஹெலிகாப்டர் தளத்திற்கு செல்கிறார். பின்னர், காலை 10 மணியளவில் கல்லூரி விழாவில் பங்கேற்ற பின், மதியம் அதே வெல்லிங்டன் ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து மாலை 12.25 மணியளவில் டெல்லிக்கு விமானம் புறப்படுகிறார். மதியம் 3.25 மணியளவில் குடியரசு தலைவர் டெல்லியை சென்றடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

குடியரசு தலைவரின் வருகையையொட்டி, பல பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, மதுரையில் சுமார் 3,500 காவலர்களும், கோவையில் 5 ஆயிரம் காவலர்களும், குன்னூரில் 500 காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.