தென்காசி மாவட்டத்தில், கிருத்திகா பட்டேல் என்பவரும் மாரியப்பனும் காதல் திருமணம் செய்திருந்த நிலையில், புதுப்பெண் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும், அந்த விவகாரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட திருப்பங்களால் கிருத்திகா பட்டேல், தன் உறவினருடன் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதித்தது.

தென்காசியில் நடந்த சம்பவத்தைப் போலவே, நெல்லை மாவட்டம் கூடங்குளம் கிராமத்திலும் நடந்திருக்கிறது. கூடங்குளத்தை அடுத்த ஸ்ரீரங்கநாதபுரத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் டிப்ளமோ முடித்து விட்டு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் அதே பகுதியைச் சேர்ந்த சுமிகா என்ற பெண்ணை ஐந்து வருடங்களாகக் காதலித்து வந்திருக்கிறார்.
இருவரின் காதல் விவகாரம் பெற்றோருக்குத் தெரியவந்ததும் எதிர்ப்பு வலுத்திருக்கிறது. குறிப்பாக சுமிகாவின் பெற்றோர் இந்த காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அதனால் இருவரும் கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியேறி, சுயமரியாதை திருமண மையத்தில் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். ஆனால், தன் மகளை முருகன் கடத்திச் சென்றதாக சுமிகாவின் பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

அதைத் தொடர்ந்து, சில வாரங்களுக்கு முன்பு இருவரையும் மதுரை உயர்நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினார்கள். இருப்பினும் இருவரும் திருமணம் செய்துகொள்ளும் வயதைக் கடந்தவர்கள் என்பதால் மணப்பெண்ணின் விருப்பத்தை நீதிபதி கேட்டார். அப்போது தன் கணவர் முருகனுடன் செல்ல சுமிகா விருப்பம் தெரிவித்ததைத் தொடர்ந்து, கணவருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
நீதிமன்றம் அனுமதி கொடுத்ததும் முருகன்-சுமிகா தம்பதியினர் சென்னையில் தங்கியிருந்தனர். கடந்த வாரம் இருவரும் முருகன் வீட்டுக்கு வந்திருக்கின்றனர். இருவரும் ஸ்ரீரங்கநாதபுரத்தில் தங்கியிருப்பதை அறிந்த சுமிகாவின் பெற்றோர், உறவினர்கள், முருகனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சுமிகாவை அடித்துத் துன்புறுத்தியதுடன், அவரை வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்றிருக்கின்றனர். அதை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்திருக்கின்றனர். அது தற்போது வைரலாக பரவி வருகிறது.

புதுப்பெண் கடத்தல் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த முருகன் மற்றும் அவரின் உறவினர்கள், உடனடியாக கூடங்குளம் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். இதுப் பற்றிக் கேள்விப்பட்ட நெல்லை மாவட்ட எஸ்.பி-யான சரவணன் மணப்பெண்ணைக் கண்டுபிடிக்க நான்கு தனிப்படைகள் அமைத்தார். அதைத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திய போலீஸார் இதுவரை 8 பேரை கைதுசெய்திருக்கின்றனர். இருப்பினும், சுமிகா எங்கு இருக்கிறார் என்பது தெரியாததால் அவரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.
புதுப்பெண் கடத்தல் குறித்து மணமகன் முருகன், ”நாங்கள் இருவரும் விருப்பப்பட்டு பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். தற்போது சொந்த ஊருக்கு வந்த நிலையில் வீட்டில் இருந்தவர்களை அடித்து விட்டு, சுமீகாவின் தந்தை, அவரின் உறவினர்கள் அவரைக் கடத்தி சென்றுவிட்டனர். என் மனைவி உயிருக்கு ஆபத்து இருப்பதால் போலீஸார் அவரை விரைவாக மீட்டுக் கொடுக்க வேண்டும்” என்றார்.

முருகனின் தாயார் சுகந்தி நம்மிடம், ”என் மகன் அந்தப் பெண்ணைக் காதலிப்பதை அறிந்ததும் நாங்களும் முதலில் எதிர்த்தோம். ஆனால் அவரையே திருமணம் செய்வதில் என் மகன் உறுதியாக இருந்ததால் கல்யாணத்துக்குச் சம்மதித்தோம். இருவரும் சட்டப்படி திருமணம் செய்துகொண்ட நிலையில் என் மருமகளை கடத்திச் சென்றுவிட்டார்கள். அவரை விரைவாக மீட்டுக் கொடுக்க வேண்டும்” என்றார்.
புதுப்பெண் கடத்தல் சம்பவம் குறித்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், தனிப்படை போலீஸார் வெளிமாநிலங்களிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.