வயநாடு அட்டப்பாடி ஆதிவாசி இளைஞர் மது கொலை வழக்கைப் போன்றே, கோழிக்கோட்டில் ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவரின் மரண வழக்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. வயநாடு மாவட்டம், கல்பற்ற வெள்ளாரம்குந்நு அருகே அட்லஸ் பாறவயல் காலனியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (46). இவருக்குத் திருமணம் நடந்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை பிறந்திருக்கிறது. பிரசவத்துக்காக அவர் மனைவி கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். குழந்தை பிறந்த மறுநாள் விஸ்வநாதன் மருத்துவமனைக்குச் சென்றபோது, காவலாளி உள்ளிட்ட சிலர் அவரைத் தடுத்து நிறுத்தி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மருத்துவமனை அருகேயுள்ள பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் விஸ்வநாதனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் இருந்த அவர், தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பு இல்லை எனவும், திருட்டு பட்டம்கட்டி விஸ்வநாதன் அடித்துக் கொலைசெய்யப்பட்டதாகவும், அவரின் உறவினர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

விஸ்வநாதன் மரணம் இயற்கைக்கு மாறானது என வழக்கு பதிவுசெய்த போலீஸார், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாய்சேய் பாதுகாப்பு மையத்தில் பணியிலிருந்த நான்கு காவலர்களிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையே விஸ்வநாதனின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இதற்கிடையே எஸ்.சி எஸ்.டி கமிஷன் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க போலீஸுக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில், கடந்த 13-ம் தேதி தனது வயநாடு தொகுதிக்கு வந்திருந்த ராகுல் காந்தி எம்.பி, விஸ்வநாதனின் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். ராகுல் காந்தி டெல்லி புறப்பட்டுச் சென்ற பிறகும் ஆதிவாசி இளைஞர் மரணத்துக்கு கேரள அரசு நீதி பெற்றுக் கொடுக்கவேண்டும் என முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அன்றைய தினம் வந்திருந்த சுமார் 450 பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் சிசிடிவி கேமரா ஆய்வு செய்யப்பட்டதில், விஸ்வநாதனிடம் பேசிய ஆறுபேரின் அடையாளம் காணப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இதற்கிடையே விஸ்வநாதன் இறந்து ஒருவாரமான நிலையில், அவர் உடல் கண்டறியப்பட்ட பகுதியிலிருந்து அவரது சட்டை கண்டுபிடிக்கப்பட்டது. அவரது சட்டை பாக்கெட்டில் 140 ரூபாயும், ஒருகட்டு பீடியும் இருந்திருக்கிறது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

இது குறித்து அவருடைய மனைவி பிந்து, “புதன்கிழமை பிரசவம் நடைபெற்றது. என் கணவனை வியாழக்கிழமை முதல் காணவில்லை. அவர் எங்காவது ஒளிந்துகொண்டிருப்பார் என நினைத்தேன். ஆனால் சனிக்கிழமை நான் வீட்டுக்கு வந்த பிறகுதான் அவர் இறந்ததாக அறிந்தேன். ஏழு ஆண்டுக்குப் பிறகு குழந்தை கிடைத்த சந்தோஷம் அவருக்கு உண்டு. எனவே அவர் தற்கொலை செய்ய வாய்ப்பில்லை. என் கணவரைக் கொன்றவர்களைக் கைதுசெய்து என் முன்பு கொண்டுவரவேண்டும். ஏன் என் கணவரைக் கொலைசெய்தீர்கள் என அவர்களிடம் நான் கேட்க வேண்டும்” என்றார்.