கோவை தெற்கு தொகுதி பா.ஜ., – எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் பேட்டி:
ஈரோடு இடைத்தேர்தலில் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் அமர்ந்து விட்டது. கோவையில் எஸ்.பி., அலுவலகம், கலெக்டர் அலுவலகம் முன் படுகொலைகள் நடக்கின்றன. தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு மிக மோசமாக உள்ளது.
கொங்கு மண்டலம், நமக்கு தான் கோட்டையாக மாறல… ரவுடிகளுக்காவது கோட்டையா இருக்கட்டும்னு ஆளுங்கட்சி நினைச்சிடுச்சோ என்னவோ?
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை:
பிரபாகரன் ஒரு வரலாற்று புருஷர். அவர் ஒரு இனத்துக்கான விடுதலைக்காக, 30 ஆண்டுகள் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். இலங்கை அரசு அவர் மரணித்ததாக அறிவித்தது. இந்தியாவில் வழக்குகள் நடைபெற்ற போது இலங்கை அரசின் அறிக்கையை இந்திய நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டன. மத்திய, மாநில அரசுகள், நெடுமாறனிடம் உளவுத்துறை மூலம் ரகசிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக மக்கள் நிம்மதியாவே இருக்கக் கூடாதுன்னு, ‘கங்கணம்’ கட்டி சுற்றும், ‘போர்வையாளர்’கள் செய்ற குழப்பம் தான் இது!
தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலர் நல்லசாமி பேட்டி:
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களம் காணும் அரசியல் கட்சிகள், பணத்தை மட்டுமே பிரதானமாக கொண்டு செயல்படுகின்றன. இது ஜனநாயகமாக இல்லை; பணநாயகமாக மாறி விட்டது.ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள பவானிசாகர் அணையில் நீர் நிர்வாகம் எந்த வகையிலும் முறையாக இல்லை. தேர்தல் களம் காணும் அரசியல் கட்சிகள் இது குறித்து பிரசாரம் செய்யவில்லை. வாக்காளர்களும் இதுகுறித்து எந்த வேட்பாளரிடமும் கேள்வியும் எழுப்பவில்லை.
வாக்காளர்கள் பண மழையில் நனைந்து, திக்குமுக்காடி கிடக்கிறாங்க… இதுல கேள்வி எல்லாம் கேட்பாங்களா என்ன?
முன்னாள் முதல்வர் ஜெ.,யின் தோழி சசிகலா அறிக்கை:
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நாளுக்கு நாள் தொடர்ந்து அராஜக செயல்கள் நடந்து கொண்டு இருப்பதால், மக்கள் பாதுகாப்பின்றி இருக்கின்றனர். தி.மு.க.,வினரை கட்டுப்படுத்த முடியாமல் விட்டு வைப்பதால் தான், ராணுவ வீரரையே கொல்லக்கூடிய அளவுக்கு, துணிச்சல் வந்துவிட்டது. மக்களை காப்பாற்ற வேண்டிய அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பது, மிகவும் வேதனை அளிக்கிறது.

இவங்க அ.தி.மு.க.,வில் இருந்தப்ப, ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்புக்காக, அவங்க கட்சியினர், அப்பாவி மாணவியரை உயிரோடு பஸ்சில் வைத்து எரித்ததை மறந்துட்டாங்களா?
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்