மதுரை: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சார்ந்த மடையாண்டி மற்றும் சிவக்குமார் ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தென்காசி மாவட்டம், திருவேங்கடம் பகுதியில் மாதரசி அம்மன் கோயில் மற்றும் மடையாண்டிசாமி கோயில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில், கடந்த 2020 முதல் ஒரு தரப்பினர், எங்களை வழிபாடு செய்ய விடாமல் தடுக்கின்றனர். இந்தாண்டு நடக்கவுள்ள மகா சிவராத்திரி விழாவில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த எங்கள் தரப்பினர் கலந்து கொண்டு, பூஜை மற்றும் வழிபாடு செய்ய அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘‘கோயில் வழிபாட்டில் பட்டியல் சமூகத்தினர் மீது பாகுபாடு காட்டக் கூடாது. அனைவரையும் சமமாக ஒரே மாதிரியாக நடத்த வேண்டும். அனைத்து தரப்பினரும் அமைதியான முறையில் வழிபாடு நடத்துவதை மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் உறுதி செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.
