சர்ச்சையில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் சேத்தன் ஷர்மா ராஜினாமா

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவரான சேத்தன் ஷர்மா தேவையில்லாமல் வாயை கொடுத்து வம்பில் மாட்டினார். தனியார் டி.வி.சேனல் நடத்திய ரகசிய ஆபரேஷனில் இந்திய அணியின் உள்விவகாரங்கள் குறித்து அவர் உளறிக்கொட்டியது கடந்த 14-ந் தேதி டெலிவிஷனில் செய்தியாக வெளியாகி பெருத்த சலசலப்பை ஏற்படுத்தியது.

அதாவது காயத்தில் சிக்கும் நிறைய இந்திய கிரிக்கெட் வீரர்கள் முழு உடல் தகுதியை எட்டாவிட்டாலும் கூட சீக்கிரம் களம் திரும்புவதற்காக ஊசிகளை போட்டுக் கொள்வதாக கூறிய அவர் விராட்கோலிக்கும், கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலிக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவியதாகவும் கூறினார். கிரிக்கெட் வாரியத்தை விட தன்னை பெரிய ஆளாக நினைத்து விராட்கோலி செயல்பட்டதால் தான் கேப்டன் பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் அவர் தனது பதவி பறிபோனதற்கு கங்குலி தான் காரணம் என்று தவறாக கருதினார். ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட சில இந்திய வீரர்கள் தனது வீட்டுக்கு அடிக்கடி வருவது உண்டு என்பது உள்பட பல்வேறு ரகசியங்களை சேத்தன் ஷர்மா அம்பலப்படுத்தினார்.

தனது பொறுப்பை உணராமல் விதிமுறைக்கு புறம்பாக எல்லை மீறி பேசிய சேத்தன் ஷர்மா மீது இந்திய கிரிக்கெட் வாரியம் மட்டுமின்றி வீரர்களும் கடும் அதிருப்திக்குள்ளானார்கள். அவர் மீது கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தனது தேர்வு குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘சேத்தன் ஷர்மா தனது ராஜினாமா கடிதத்தை இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷாவுக்கு அனுப்பி இருக்கிறார். அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர் தானாக முன்வந்து பதவியை துறந்துள்ளார். அவரை விலகும்படி யாரும் கேட்டுக்கொள்ளவில்லை’ என்றார்.

ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியை நேரில் காண கொல்கத்தா சென்று இருந்த சேத்தன் ஷர்மா தனது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதால், அவசரமாக நேற்று டெல்லி திரும்பினார். அவரது விலகலை தொடர்ந்து எஸ்.எஸ்.தாஸ் தேர்வு குழுவின் இடைக்கால தலைவராக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரைஇறுதியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோற்று வெளியேறியது. தோல்வி எதிரொலியாக சேத்தன் ஷர்மா தலைமையிலான இந்திய தேர்வு கமிட்டியை கூண்டோடு கலைத்து கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்தது.

இதைத்தொடர்ந்து கடந்த மாதம் புதிய தேர்வு குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பஞ்சாப்பை சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான 57 வயது சேத்தன் ஷர்மா தொடர்ந்து 2-வது முறையாக தேர்வு குழு தலைவராக நியமிக்கப்பட்டார். உறுப்பினர்களாக சலில் அங்கோலா, எஸ்.எஸ்.தாஸ், சுப்ரதோ பானர்ஜி, எஸ்.சரத் ஆகியோர் தேர்வாகினர். இரண்டாவது முறையாக தலைவர் பொறுப்பை ஏற்ற ஒரு மாதத்திற்குள் சேத்தன் சர்ச்சையில் சிக்கி பதவியை இழந்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.