அகமதாபாத்: சர்தார் வல்லபபாய் படேலின் சிலை மீது அவரது வரலாறை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ஒளி, ஒலி காட்சி மூலம் நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் இளம் தலைமுறையினரும் படேலின் வரலாறை அறிவதற்கான சூழல் உருவாகியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள நர்மதை நதிக்கரையில், சர்தார் சரோவர் அணையின் அருகே ரூ.2,989 கோடி மதிப்பீட்டில் 182 மீட்டர் உயரமுள்ள சர்தார் வல்லபபாய் படேல் சிலை நிறுவப்பட்டுள்ளது. 3,400 பணியாளர்கள், 250 பொறியாளர்கள் இணைந்து இரவு பகலாக வேலை செய்து 42 மாதங்களில் இந்த உலகின் மிக உயரமான சிலை கட்டி முடிக்கப்பட்டது. வல்லபபாய் படேலின் 143-வது பிறந்த தினமான கடந்த 2018-ம் ஆண்டு அக்.31-ம் தேதி, இந்த ஒற்றுமை சிலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி. உலகிலேயே உயரமான சிலை என்ற பெயரை பெற்று கம்பீரமாக இன்றளவும் காட்சியளித்து வரும் இச்சிலையை பார்க்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் இந்தச் சிலையின் முன் நின்று ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். இதன் மூலம் அந்தப் பகுதி ஒரு சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது. குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் நாளுக்கு நாள் இங்கு அதிகரித்து வருகிறது.
படேல் சிலையை மாலை வேளையில் பார்க்க வரும் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில், இரவு 7 மணிக்கு மேல் அவருடைய சிலை மீது லேசர் ஒளி, ஒலி காட்சி மூலம் அவருடைய வாழ்க்கை வரலாறு, இந்தியாவின் சுதந்திரத்தில் அவருடைய பங்கு ஆகியவை எடுத்துரைக்கப்படுகின்றன. இந்த ஒளி, ஒலி காட்சிகள் இந்தி மொழியில் மட்டுமே நிகழ்த்தப்படுகின்றன. பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்வதால், அவர்களுக்கும் நாட்டின் பெருமையையும் வல்லபபாய் படேலின் முக்கியத்துவத்தையும் கொண்டு சேர்க்கும் விதமாக இந்த ஒளி, ஒலி காட்சியின் கருத்துகள் மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தமிழ் உட்பட 18 பிராந்திய மொழிகளில் லேசர் ஒளி, ஒலி காட்சிகள் மூலம் படேலின் வாழ்க்கை வரலாறை அறிந்துகொள்ள முடியும் என அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளும் அறியும் வகையில் பிற நாட்டு மொழிகளில் படேலின் வரலாற்றை மொழி பெயர்ப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்த நர்மதை ஆற்றங்கரையோரமாக படேல் சிலை அமைக்கப்பட்டதால் சுமார் 22 கிமீ தூரத்தில் ஏராளமான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி இங்குள்ள 24 கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்துக்கு வழி செய்யும் வகையில் ‘ஒற்றுமைக்கான சிலை’ அமைப்பு மூலம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. அந்த வகையில், சுற்றுலாப் பயணிகளுக்கான இலவச குடிநீர் விநியோகம், உட்புற பராமரிப்பு பணிகள் ஆகியவற்றில் இந்த பழங்குடியின மக்கள் மூலமே மேற்கொள்ளப்படுகின்றன.
இதுதவிர, சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்து வசதிக்காக ‘இ-ரிக் ஷா’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை இயக்க பழங்குடியின பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களே இயக்குகின்றனர். அவர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.650 வாடகை செலுத்தி இ-ரிக் ஷாவை எடுத்து இயக்கினால், ரூ.1,500 முதல் ரூ.2 ஆயிரம் வரை வருவாய் ஈட்டுவதாகக் கூறுகின்றனர். தற்போது 175 இ-ரிக் ஷாக்கள் இயக்கப்படுகின்றன. வரும் நாட்களில் 300 இ-ரிக் ஷாக்களாக அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது ஒருபுறமிருக்க பெண்களுக்கு கார் ஓட்டும் பயிற்சியும் வழங்கப்படுகிறது. இவ்வாறு சுய தொழில் மூலம் வருவாய், உட்கட்டமைப்பு வசதி போன்றவை ஏற்படுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக பழங்குடியின மக்கள் தெரிவிக்கின்றனர்.