“காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல் நிகழ்வுகள் நடக்கிறது. ஆனால், சாதாரண காவல்துறை விசாரணைகளையும் மனித உரிமை மீறல்களாக கருதமுடியாது” என்று, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த வெள்ளி வியாபாரி ரமேஷ் என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதில், “சுமித்தி சலானி என்பவருக்கு வெள்ளி விளக்குகள் சப்ளை செய்த வகையில் தனக்கு தர வேண்டிய பாக்கித் தொகையை தரவில்லை.
இதுகுறித்து சலானி மீது நான் கொடுத்த புகாரின் பேரில், விசாரணைக்கு அழைத்து கட்டப் பஞ்சாயத்து செய்த உதவி ஆணையர் லட்சுமணன், என்னுடைய மெர்சிடஸ் பென்ஸ் காரின் ஆவணங்களை வாங்கிக் கொண்டார்” என்று புகாரில் ரமேஷ் தெரிவித்திருந்தார்.
இதனை விசாரணை செய்த மனித உரிமை ஆணையம், உதவி ஆணையருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்தது.
ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து, உதவி ஆணையர் லட்சுமணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், எந்தவித மனித உரிமை மீறலுக்கும் ரமேஷ் ஆளாக்கப்படவில்லை. மனித உரிமை ஆணைய உத்தரவு ரத்து செய்யப்படுவதாக தீர்ப்பளித்தனர்.
மேலும், காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல்கள் நடக்கிறது. ஆனால், சாதாரணமான ஒவ்வொரு போலீஸ் விசாரணையயும் மனித உரிமை மீறலாக கருத முடியாது. விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் போலீசார் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை தெரிவிப்பது, ஒட்டுமொத்த காவல்துறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.