ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர் சமூக மக்களை பற்றி தவறான வகையில் பேசினார். இது அச்சமூக மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, வேட்பாளர் மேனகாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க செல்லும் கட்சியினரை அருந்ததியினர் சமூக மக்கள் விரட்டியடித்து வருகின்றனர். நேற்று முன்தினம் ஈரோடு சூளை காந்திநகரில் வாக்கு சேகரிக்க சென்ற கட்சி நிர்வாகிகளை அப்பகுதி மக்கள் உள்ளே விடாமல் விரட்டியடித்தனர்.
இதே போல், ஈரோடு ராஜாஜிபுரத்திலும் விரட்டியடிக்கப்பட்டனர். அப்போது, இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டதில் கட்சி நிர்வாகி அன்பு தென்னரசு மண்டை உடைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை ஈரோடு பழைய பூந்துறைரோடு ஓடைப்பள்ளம் அருகில் நாம் தமிழர் கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் சிந்தனைச்செல்வன் தலைமையிலான அப்பகுதி மக்கள், அருந்ததியர் மக்களை பற்றி தவறாக பேசிவிட்டு ஏன் எங்களிடம் வந்து ஓட்டு கேட்கிறீர்கள். சீமான் மன்னிப்பு கேட்கும் வரை உங்களை அனுமதிக்க மாட்டோம் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கட்சியினர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கைது செய்ய கோரி மறியல்: ஈரோடு ராஜாஜிபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் திருநகர்காலனி பஸ் ஸ்டாப் பகுதியில் நேற்று திரண்டு, சீமானை கைது செய்ய வலியுறுத்தி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சென்று அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். நாதகவினர் சிலர் மீண்டும் நேற்று ராஜாஜிபுரம் பகுதிக்கு ஓட்டு கேட்டு சென்றனர். ஆனால், போலீசார், ஏற்கனவே பிரச்னை நடந்து இருப்பதால் மற்றொரு நாளில் வைத்து கொள்ள அறிவுறுத்தினர். இதனால் திரும்பி சென்றனர்.