தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் குஷ்பூ, இப்போது சீரியல்களில் நடித்து வருகிறார். தமிழ் படங்களில் நடித்தாலும் இப்போது ஆந்திர தொடர்களில் அதிகம் நடித்து வருகிறார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தீவிரமாக களமாற்றிய அவர், ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன்பிறகு அவர் தமிழக அரசியலில் அதிகம் பார்க்க முடியவில்லை. தமிழக பாஜகவின் முகமாக அண்ணாமலை மாறிய பிறகு தன்னுடைய அரசியல் பணிகளை குறைத்துக் கொண்டு மீண்டும் சினிமா சீரியல் என கவனம் செலுத்தி வருகிறார். இருப்பினும் 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு அவரிடம் ஒரு கணக்கு இருப்பதாக பிரபல சினிமா பத்திரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வலைப்பேச்சு யூடியூப் சேனலில் பேசியிருக்கும் அவர்கள், 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் குஷ்பூ ஆந்திராவில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். இப்போது தெலுங்கு சீரியல்களில் அதிகம் நடித்து வரும் குஷ்பூ புதுப் பங்களா ஒன்றும் அங்கு வாங்கியிருக்கிறாராம். அடிக்கடி ஆந்திரா செல்லும் அவர், ஹோட்டல்களில் தங்குவதற்கு சிரமமாக இருப்பதால் புது வீடு வாங்கி குடியேறி இருக்கிறாராம். அதுவும் அடுத்த மக்களவை தேர்தலை மனதில் வைத்தே இந்த முடிவை குஷ்பூ எடுத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த மக்களவை தேர்தலில் அவருக்கு போட்டியிட இடம் கிடைக்குமா? என தெரியவில்லை. அப்படி வாய்ப்பு கிடைத்து போட்டியிட்டாலும் வெற்றிபெற முடியுமா? என்ற சந்தேகம் இருப்பதால், ஆந்திர மாநிலத்தில் இருந்து தன்னுடைய அடுத்த ரவுண்டு அரசியல் பயணத்தை அவர் மும்முரமாக தொடங்க இருப்பதாகவும் வலைப்பேச்சு யூடியூப் தளத்தில் பேசியிருக்கின்றனர். ஆனால் இதில் எந்தளவு உண்மை உள்ளது? என்ற கேள்வியும் அரசியல் நோக்கர்கள் எழுப்பியுள்ளனர்.