திருப்பூர் அருகே தமிழக அரசு பள்ளியின் உள்ளே புகுந்து கம்பியூட்டர் உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள் அடித்து உடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் திருச்சி- கோயம்புத்தூர் சாலையில் தமிழக அரசு அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.
இந்த பள்ளியில் வெள்ளகோவிலில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த 650 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இன்று சனிக்கிழமை என்பதால் பள்ளிக்கு விடுமுறை.
ஆனால், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று காலை சிறப்பு வகுப்புகள் நடைபெற்றது. அப்போது, பள்ளியின் தலைமை ஆசிரியர் குணசேகரன் அறையின் கதவு உடைக்கப்பட்டு, பொருட்கள் சேதமாகி இருப்பதை கண்டு ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தார்.
அறையில் இருந்த கம்ப்யூட்டர், மோடம் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்திய மர்ம நபர்கள், சிசிடிவி. கேமராவையும், தலைமை ஆசிரியர் மேஜையையும் அடித்து உடைத்துள்ளனர்.
மேலும், சி.சி.டி.வி. கேமராவின் கட்டுப்பாட்டு கருவி மற்றும் பள்ளி அறைகளின் சாவியையும் மர்மநபர்கள் எடுத்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து, வெள்ளகோவில் காவல்நிலையத்தில் பள்ளி தரப்பில் புகார் அளிக்கவே, சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.