சென்னை, அண்ணாநகர் மேற்கு புதுகாலனியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (34). மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் இவர் அம்மு (23) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறார். சீனிவாசனுக்கு அதிக மதுப்பழக்கம் இருந்திருக்கிறது. தினமும் குடித்துவிட்டு மதுபோதையில் வீட்டுக்கு வரும் சீனிவாசன், அம்முவுடன் தகராறு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இந்த நிலையில், அம்முவுக்கு அவரின் உறவினர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் இருவருக்குமிடையே நெருக்கம் அதிகரித்து, திருமணம் மீறிய உறவாக மாறியிருக்கிறது. இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாகச் சுற்றியிருக்கிறார்கள். இவர்களின் பழக்கத்தைத் தெரிந்துகொண்ட சீனிவாசன் தன் மனைவியைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார். இருந்தபோதிலும் அம்மு அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி மதுபோதையில் வீட்டுக்கு வந்த சீனிவாசன் உறவை விட்டுவிடும்படி சொல்லி தகராறு செய்திருக்கிறார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சீனிவாசன் தன் மனைவி அம்முவைக், கத்தியால் கழுத்தில் வெட்டிப் படுகொலைசெய்திருக்கிறார். தான் கொலை செய்த தகவலைக் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவலை சொல்லிவிட்டுத் தலைமறைவாக இருந்தார். அவரை டி.பி.சத்திரம் போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்த கொலை தொடர்பான வழக்கு அல்லிக்குளத்தில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.
இந்நிலையில், நீதிபதி டி.ஹெச்.முகமது பாரூக் தீர்ப்பளித்தார். அதில், மனைவியின் செயலால் சீனிவாசன் ஆத்திரத்தில் குற்றம் செய்திருக்கிறார். அவருக்கு பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஐந்து ஆயிரம் ரூபாய் அபராதமும். அதனைக் கட்ட தவறினால் மேலும் ஆறுமாதம் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. அதோடு, அவர்களின் மகனுக்கு அரசிடம் இருந்து தகுந்த இழப்பீடு பெற்றுத் தர மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று நீதிபதி கூறினார்.