புதுடெல்லி: தேசிய கல்விக் கொள்கையில் டிஜிட்டல் வழிக் கற்றலுக்கு அதிகளவில் ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் சுரேஷ் சர்க்கார் கூறினார்.
சென்னை ஐஐடியில் ‘பொதுகொள்கை மேம்பாடு’ தொடர்பான கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்தியகல்வித்துறை இணையமைச்சர் சுரேஷ் சர்க்கார் பேசியதாவது:
அறிவுசார் வல்லரசாக மாற்ற – பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பொதுக் கொள்கைகள் உருவாக்கப்பட்டு அமல் படுத்தப்படுகிறது. அந்தவகையில் அனைவருக்கும் உயர்தரமான கல்வியை வழங்கி இந்தியாவை அறிவுசார் வல்லரசாக மாற்றுவதை தேசிய கல்விக்கொள்கை-2020 நோக்கமாக கொண்டுள்ளது. 21-ம் நூற்றாண்டுக்கான புதிய பாதையை உருவாக்குவதற்கான விதைகளை புதிய கல்விக் கொள்கை விதைக்கும். இந்த கல்விக் கொள்கையை சிறப்புடன் செயல்படுத்த அனைவரின் ஒருங்கிணைந்த முயற்சி அவசியமாகும்.
வரும் 2030-ம் ஆண்டுக்குள் அனைத்து உயர்கல்வி பாடவகுப்புகளும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் வகையில் இந்த கொள்கை டிஜிட்டல் கல்வி முறைக்கு ஊக்கமளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, பதிவாளர் ஜேன் பிரசாத், திறன் கட்டமைப்பு ஆணையத்தின் செயலர் ஹேமங் ஜானி உட்பட பலர் பங்கேற்றனர்.