“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளும் கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைவார். அப்போது தோல்விக்கு காரணம் காங்கிரஸ் தான் என்று திமுக பழி சொல்லவும்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிந்தனை சிற்பி சிங்காரவேலர் சிலைக்கு கீழ், அவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்தாவது, “எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சனம் செய்யும் கனிமொழிக்கு, அதிமுக ஆட்சியை கலைத்த இந்திரா காந்தியுடன் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி செய்தவர் கருணாநிதி என்ற பழைய வரலாறு தெரியாது.
எங்களுடைய அதிமுக ஆட்சிக் காலத்தில் இலங்கை கடற்படை பயந்து இருந்தது. தற்போது திமுக ஆட்சிக்கு வந்த பின் மீண்டும் துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறி வருகிறது. அதுவும் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆம்லேட், டீ போடும் திமுக அமைச்சர்கள் இன்னும் பாத்திரத்தை மட்டும் தான் கழுவவில்லை. கிழக்கு இடைத்தேர்தலில் ஆளும் கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைவார். காங்கிரஸ் மீது திமுக தோல்வி பழியைப் போடும். ” என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.